விவசாயிகள் ஊக்கத்தொகைத் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் வருகிற 26ந் தேதிக்குள் திருப்பி செலுத்தாவிட்டால் குற்ற நடவடிக்கை பாயும் என திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இணையதளம் மூலம் நேரடி பதிவு
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இணையதளம் மூலம் விவசாயிகளே நேரடியாக பதிவு செய்யலாம் என்று இந்த திட்டத்தில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெற முடியும் என்ற நிலையில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் போலியாக பயன் அடைந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட்களை தனியார் புரோக்கர்கள் தவறாக பயன்படுத்தி¸ அப்பாவி பொதுமக்களிடம் ஆதார்¸ வங்கி புத்தகத்தை வாங்கி போலியாக பதிவு செய்து மோசடி செய்து விட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மோசடியில் ஈடுப்ட்ட 3 வேளாண் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 80 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 18 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் திட்டத்தில் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக-பாஜக மோதல்
முறைகேடு நடந்திருப்பதற்கு மத்திய அரசு விதிமுறையை தளர்த்தியதுதான் காரணம் என திருவண்ணாமலைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகு திருவண்ணாமலைக்கு வந்த பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் முதல்வர் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசின் திட்டத்தை அமுல் படுத்துவது மாநில அரசுதான். நாங்கள் எச்சரிக்கையுடன் பேசுகின்ற வேலையில் தமிழக முதல்வர் மத்திய அரசுதான் காரணம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது, இது சம்மந்தமாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் இது குறித்து அரசு சார்பில் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அரசு பணம் தகுதி இல்லாதவர்களுக்கு சென்றால்¸ அந்த பணத்தை திரும்ப பெறும் சட்டத்தின் கீழ் தகுதியில்லாதவர்களிடமிருந்து பணம் திரும்ப வசூல் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 43¸323 தகுதியற்ற நபர்கள் பணம் பெற்றிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வேளாண்மைத்துறை¸ வருவாய்த்துறை¸ ஊரகவளர்ச்சி மற்றும் காவல்துறை மூலம் கூட்டாக தொகையை வசூல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சென்ற மாதம் வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 35¸155 தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து ரூ.10.41 கோடி திரும்ப வசூல் செய்யப்பட்டுள்ளது. 1மாதத்தில் தமிழகத்தில் மொத்த பணமும் திரும்ப பெறப்படும் என செப்டம்பர் மாதம் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியிருந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் மாதம் முடிய உள்ள நிலையிலும் மொத்த பணத்தையும் மீட்க முடியவில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இது சம்மந்தமான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் முறைகேடாக பெற்ற தொகையினை வசூல் செய்யும் பணியில் வேளாண்மைத்துறை¸ வருவாய்த்துறை¸ ஊரகவளர்ச்சி மற்றும் காவல்துறையோடு கிராம நிர்வாக அலுவலர்கள்¸ ஊராட்சி செயலாளர்களையும் ஈடுபடுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் பெற்றவர்கள் வருகிற 26ந் தேதிக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.