வாழ்க்கை முழுவதும் பிராண வாயுவை நமக்கு தந்து கொண்டிருக்கிற மரங்கள் தாயை விட மேலானது என திருவண்ணாமலையில் நடிகர் விவேக் கூறினார்.
திருவண்ணாமலை நகரில் அனைத்துப்பகுதிகளிலும் தூய்மை மற்றும் நலம் பேணும் பொருட்டு தூய்மை அருணை என்ற திட்டத்தின் மூலம் அருணை மாநகரை தூய்மைப்படுத்துதல்¸ மரம் நடுதல்¸ மருத்துவ முகாம் போன்ற பணிகள் தொடங்கப்பட்டது. தூய்மை அருணை திட்ட பணிகளை செய்வதற்கு 40 ஒருங்கிணைப்பாளர்களும்¸ அண்ணாமலையார் திருக்கோவில் மாடவீதியில் தினமும் நடைபெறும் தூய்மை பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தூய்மை அருணை திட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் 1இலட்சம் மரக்கன்றுகள் நடுவது என தீர்மானிக்கப்பட்டு¸ மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேனிமலையில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று 19.11.2020 வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை¸ தேனிமலையில் தூய்மை அருணை சார்பில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சரும்¸ தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர்களான சி.என்.அண்ணாதுரை எம்.பி¸ சாவல்பூண்டி மா.சுந்தரேசன்¸ டாக்டர் எ.வ.வே.கம்பன்¸ மு.பெ.கிரி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திவேல்மாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலரும்¸ திரைப்பட நடிகருமான விவேக் கலந்து கொண்டு தேனிமலை மலைப்பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸
இங்கே மஞ்சள் படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். ஒரு விதத்தில் மஞ்சள் மிகமுக்கியமான பொருள் என்று இங்கே திரண்டுள்ள தாய்மார்களுக்கு தெரியும். மஞ்சள் ஒரு கிருமிநாசினியாக பயன்படுகிறது. இன்று எனது பிறந்தநாள். பிறந்தநாளை நான் எனது திரைப்பட நண்பர்களோடு கொண்டாடி இருக்கலாம். ஆனால் மரம்நடுவதன் மூலமாக¸ அதுவும் திருவண்ணாமலையில் மரம் நடுவது என்பது சிறப்பானது. இதுவரை நான் எங்கள் அமைப்பின் மூலம் 33¸33¸300 மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். அருணை மாநகர் மிக புனிதமான மண்¸ இதற்கு அருணகிரி நாதர் மட்டும் அல்ல¸ கிரிவலம்¸ ரமணர்¸ சேஷாத்திரி சுவாமிகள்¸ யோகிராம்சுரத்குமார் என பல பெருமைகள் உண்டு.
இது கந்தக மலை. இங்கு எதுவும் விளையாது ஆனால் தூய்மை அருணையின் சாதனையால்¸ இங்கே மரங்கள் நடப்பட்டு¸ பசுமையாக உள்ளது. ஒரு நோயாளியின் ஆயுள் என்பது¸ அவருடைய நுரையீரல் எவ்வளவு ஆக்ஸிஜனை பெறுகிறது என்பதில் தான் உள்ளது. இந்த ஆக்ஸிஜனை தருவது மரங்கள்தான்.
தாய் வயிற்றில் உள்ள குழந்தைகள் சுவாசிப்பதில்லை. அது தாய் வயிற்றில் இருந்து வெளியே வந்த பிறகு அழ ஆரம்பித்த பிறகு நுரையிரல் வேலை செய்து அதற்கு ஆக்ஸிசன் கிடைக்கிறது. அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது எப்படி உயிரோடு இருந்தோம் என்றால் அம்மாவின் வயிற்றில் இருந்து குழந்தையின் வயிற்றுக்கு வரும் டியூப் வழியாக உணவும்¸ பிரணா வாயும் கிடைக்கிறது. ஒவ்வொருவருக்கும் அம்மா வைக்கிற அந்த டியூப்தான் முதல் யூ டியூப். அப்புறம்தான் இந்த யூ டியூப். 9 மாதம் சுமக்கிற அம்மாவை புகழ்கிறோம்¸ கும்பிடுகிறோம் என்றால் அதன்பிறகு பூமியில் நாம் வந்து விழந்ததில் இருந்து உலகத்தை விட்டு செல்லும் வரை ஆக்ஸிசன் தருகிற மரங்கள் தாய்க்கு மேலானது அல்லவா? மரங்கள் வளர்த்தால் காற்றில் மாசு குறையும்¸ ஆக்ஸிசன் அளவை அதிகப்படுத்தும். எனவே மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும்.
உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால்¸ முதலாவது முககவசத்தை மூக்கையும்¸ வாயையும் மூடுவது போல் சரியாக அணியவேண்டும். இரண்டாவதாக கூட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மூன்றாவதாக கிருமிநாசினி மற்றும் சோப்புக்கட்டிகளை கொண்டு கை கழுவ வேண்டும். இன்னொரு முக்கியமான செய்தி வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது¸ வீட்டில் தைலம் கொண்டு ஆவிபிடிக்க வேண்டும். உப்பு தண்ணீரில் வாயினை கொப்பளிக்க வேண்டும். உங்களை எந்து வியாதியும் அண்டாது.
இவ்வாறு பேசினார்
நடிகர் விவேக் இன்று தனது பிறந்த நாளை மரக்கன்றுகளை நட்டு வித்தியாசமாக கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன்¸ திரைப்பட நடிகர் முருகன்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன்¸ பேச்சருவி கு.சபரி¸ எழுத்தாளர் ந.சண்முகம் மற்றும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்களான ஆர்.எஸ்.செல்வம்¸ மா.சின்ராஜ்¸ இல.குணசேகரன்¸ ஆர்.டி.பிரகாஷ்¸ இர.சீனுவாசன்¸ ஏ.ஏ.ஆறுமுகம்¸ வழக்கறிஞர்கள் அருள்குமரன்¸ இரா.கார்த்திகேயன்¸ ந.சீனுவாசன்¸ மா.செந்தில்¸ நா.சரவணன் உள்பட மாணவர்கள்¸ இளைஞர்கள்¸ தன்னார்வலர்கள்¸ தொழிலதிபர்கள்¸ பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் இரா.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.