Homeஆன்மீகம்தீப திருவிழா:கலெக்டர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

தீப திருவிழா:கலெக்டர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

  

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் மாடவீதியில் சாமி வீதி உலாவிற்கும்¸ தேரோட்டத்திற்கும்¸ பரணி மற்றும் மகாதீபத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் தடை விதித்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவிற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடை உத்தரவின் காரணமாக தீபத்திருவிழா நடத்தப்படும் முறை குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு விளக்கமும் அளிக்காததால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இது சம்மந்தமாக விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் ஏ.சக்திவேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த கோயில் நிர்வாகம் 12ந்தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இது சம்மந்தமான அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் கந்தசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். பிறகு தீபத்திருவிழா நடைபெறுவது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது¸

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 17.11.2020 அன்று துர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி 3.12.2020 அன்று  சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. 20.11.2020 அன்று அருணாசலேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கும். 29.11.2020 அன்று கோயில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கை பாதிக்கப்படாத வகையிலும்¸ அதே சமயம் கொரோனோ நோய் தொற்றினை கட்டுப்பாட்டில் வைத்திடவும்¸ தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்பட்சத்திலும்¸ அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2020-ம் ஆண்டு தீபத்திருவிழாவினை பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்.

தற்போதைய கொரோனா நோய் தடுப்பு நடைமுறையில்  அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள்  அனுமதிக்கப்படுகிறார்கள். வார நாட்களில் சுமார் 4000 முதல் 5000 பக்தர்கள்¸ விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள்¸ பௌர்ணமி¸ அமாவாசை மற்றும் பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் சுமார் 8000 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

See also  காலை முதல் மாலை வரை அமைச்சர் சேகர்பாபு சுற்றுப்பயணம்

இதனடிப்படையில்¸ தற்போது நடைபெற உள்ள தீபத்திருவிழா காலமான 17.11.2020 முதல் 03.12.2020 வரை 29.11.2020 தீபத் திருநாள் தவிர தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு மிகாமல்  கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட பின்வரும் வழிமுறைகளின்படி கோவிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற திருக்கோவில் இணையதளத்தில் e-registration மூலமாக ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து அதனடிப்படையில்¸ உரிய அடையாள அட்டையுடன் 29.11.2020 தீபத் திருநாள் தவிர கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள்.

சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பதிவு செய்யும் வழிமுறை பின்னர் பத்திரிகை செய்தியாகவும் மற்றும் கோவில் இணைய தளத்தின் வாயிலாகவும் வெளியிடப்படும். பக்தர்கள் முன்பதிவு செய்த தினத்திற்கு மட்டுமே தரிசனம் செய்ய சோதனை சாவடிகளில் தணிக்கை செய்து அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சுவாமி பல்லக்கு தூக்கும் பணியாளர்கள்¸ கோவில் பிரகாரம் பணி தொடர்பான ஊழியர்கள்¸ மற்றும் சிவாச்சாரியார்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு கோவிலின் உள்ளே சென்று பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். கட்டளைதாரர்கள்¸உபயதாரர்கள்¸ திருப்பணி உபயதாரர்கள் தீபத் திருவிழா நாட்களில் கோவிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஆனால் மேற்படி நபர்கள் திருக்கோவிலுக்கு வழங்கும் காணிக்கைகளை பெற்று அவர்கள் தெரிவிக்கும் வகையில் உரிய முறையில் விழா நடைமுறைப்படுத்தப்படும்.

சுவாமி திருவீதி உலாவானது¸ கோவிலின் வெளிபுறத்தில் உள்ள மாட வீதியில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த நிகழ்வு ஆகும். இதனை தற்போது கோவில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடத்தப்படும். 26.11.2020 அன்று கோவில் வளாகத்தின் வெளியே உள்ளே மாடவீதிகளில் பராம்பரியமாக நடைபெற்று வந்த  அண்ணாமலையார் மகா ரத தேரோட்டம் உள்ளிட்ட 5 தேரோட்ட நிகழ்வினையும்¸ கோவில் வளாகத்தின் உள்ளேயே ஆகம விதிகளின்படி நடத்தப்படும். அய்யங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தெப்பல் திருவிழாவினை¸ தற்போது கோவில் வளாகத்தினுள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஆகம விதிகளின்படி 30.11.2020 முதல் 2.12.2020 வரை நடத்தப்படும்.

இந்நிகழ்வுகளை தொலைக்காட்சி¸ யூடியூப்¸ திருக்கோவில் இணைய தளம் அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். 29.11.2020 தீபத் திருநாளன்று பொதுமக்கள்¸ பக்தர்கள்  கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்திட பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மேற்கண்ட தீபத் திருவிழா நாட்களிலும் தீபத் திருவிழா நாளான 29.11.2020 மற்றும் அதனை தொடர்ந்து 30.11.2020 அன்று வரப்பெறும் பவுர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. தீபத்திருவிழா காலங்களில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவின்போது 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்து வசதி கிடையாது. திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவலப்பாதை¸ அரசினர் கலைக்கல்லூரி அருகே உள்ள அரசு புறம்போக்கு காலி மைதானத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை இந்த ஆண்டு நடத்த அனுமதி கிடையாது.

See also  பராமரிப்பற்ற சிவலிங்கங்களை மீட்க குழு அமைப்பு

29.11.2020 அன்று நடைபெற உள்ள தீபத் திருவிழாவினை திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரினை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே அண்ணாமலையார் மலை உச்சியின் மீது ஏற்றப்படும் தீபத்தினை தரிசனம் செய்திடுமாறும்¸ பொதுமக்கள் நகரின் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும்¸ கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கலெக்டரின் இந்த அறிவிப்பு பக்தர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தீபத்திருவிழா நடத்திட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் 18ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது கலெக்டரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். தீபதிருவிழாவில் 10 நாட்களும் மாடவீதியில் சாமி ஊர்வலம் நடத்திட வேண்டும் என்பதும்¸ ஏற்கனவே அனுமதித்தபடி மலையேற 2500 பக்தர்களை அனுமதித்திட வேண்டும் என்பதும்¸ இதே போல் பரணி மற்றும் மகாதீபத்தன்று குறைந்த அளவிலாவது கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் வாதமாக அமையும் என்றார். 

ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை மற்றும் அடியார்கள்¸ பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் இரா.மோகன்சாது  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது¸ 

பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாகவும்¸ நினைத்தேலே முக்தி தரக்கூடிய தலமாகவும்¸ ‘ஆடிப்பாடி அண்ணாமலையை கைத்தொழ ஓடிப்போகும் நமது உள்ள வினைகளே” என்ற தேவார திருவாசகத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த உலக இந்து மக்களின் நம்பிக்கை தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலமாகும். மேற்படி திருக்கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது ஒட்டுமொத்த அண்ணாமலையார் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. மேற்படி அறிக்கையானது ஒட்டுமொத்த உலக அண்ணாமலையார் பக்தர்களுக்கு எதிரானது. ஜனநாய உரிமை பறிக்கப்பட்ட அவலநிலையை மேற்படி தங்களின் அறிக்கை உறுதிபடுத்துகிறது.

See also  வியக்க வைக்கும் கோட்டை ராஜ காளியம்மன் கோயில்

அண்ணாமலையார் திருக்கோவில் தீபத்திருவிழாவனது தொடர் பாரம்பரியமாக வழிவழியாக இந்து முறைப்படி நடைபெற்று கொண்டிருக்கின்ற திருவிழா பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுவது தொன்றுதொட்டு வழக்கம். இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் மேலான அறிக்கை உறுதிபடுத்துகிறது.

மாவட்ட ஆட்சியர்¸ காவல் துறையினர் மற்றும் ஏனைய அரசுத்துறைகள் இந்து கோவிலில் நடைபெறும் தீபத்திருவிழா தேரோட்டம் உட்பட எந்தவொரு நற்காரியங்களையும் தடுத்து நிறுத்தவோ¸ தடைசெய்யவோ¸ மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட¸ பிற அனைத்து துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும். வழிவழியாக தொடர் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு செயலையும் அற்ப காரணங்களைக்கொண்டு தடுத்து நிறுத்தவோ¸ அல்லது தடைவிதிக்கவோ¸ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்ககூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு (W.A.No.3813 of 2019) ஆணை பிறப்பித்துள்ளது உச்சநீதி மன்றமே சமீபகால தீர்ப்பில் பூரிஜெகநாதர் ஆலய திருவிழாவில் தேரோட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் தங்களின் தடை உத்திரவுகள் ஜனநாயகத்திற்கு புறம்பானது. ஒட்டுமொத்த அண்ணாமலையார் உலக பக்தர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக உள்ளது.

எனவே அனைத்து தடைகளையும் நீக்கி திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத்திருவிழாவினை பொது வாகனப் போக்குவரத்து மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படி இரவுநேர மாடவீதி உலா கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் நடைபெற அனுமதி அளிக்க வேண்டுகிறேன்.

தவறும்பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மாவட்ட நிர்வாகத்தை நம்பி ஏமாந்த அண்ணாமலை பக்தர்கள் நீதிமன்ற உத்தரவு எப்படி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!