திருவண்ணாமலை தீ விபத்து- சேதம் ரூ.2 கோடி
பாஜக பிரமுகர் கடையில் இருந்த மோட்டார்-பைப்புகள் எரிந்து நாசம் – தீயணைப்பு துறை மீது மக்கள் அதிருப்தி – இடி விழுந்ததில் 4 பேர் படுகாயம்
திருவண்ணாமலையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகளில் இருந்த மின் மோட்டார்கள், சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.2 கோடி என சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலையில் ஒரு சில நாட்கள் மாலை நேரங்களில் மழை பெய்தது. கடந்த 31ந் தேதி இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில் சொரகொளத்தூரில் சங்கீதா என்பவருக்கு சொந்தமான கறவை மாடும், மாதலம்பாடியில் மணிமாறனுக்கு சொந்தமான கறவை மாடும் மின்னல் தாக்கி இறந்தன.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் திருவண்ணாமலை கொசமடத் தெருவில் உள்ள கடைகள் மீது இடி விழுந்தாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த கடைகளில் இருந்த பொருட்கள் தீப்பற்றின. தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தீயணைப்பு வண்டியில் தண்ணீர் காலியாகியது. ஓரு வண்டி மட்டும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து உதவிக்கு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. அந்த வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி கரும்புகையாக காட்சியளித்தது. இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. பக்கத்து ஊரில் இருந்து தீயணைப்பு வண்டிகளை உடனடியாக வரவழைத்திருந்தால் சேதத்தை தவிர்த்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். திருவண்ணாமலை தீயணைப்பு துறை துரிதமாக செயல்படாதது பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் சிவசக்தி பிளாஸ்டிக் மாமூல் பஜார், அருணாச்சலீஸ்வரர் ஏஜென்சீஸ், கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ், சுஜாதா ஆப்டிக்கல்ஸ், ஹீரோ சைக்கிள் கடை உள்ளிட்ட கடைகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதில் அருணாச்சலீஸ்வரர் என்ற மின் மோட்டார் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த கடையின் பின்புறம் குடோனில் இருந்த பிவிசி பைப்புகள், முதல் மாடியில் இருந்த மின் மோட்டார்கள் எரிந்து நாசமாயின. இந்த கடையில் மட்டும் ரூ.70 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 இளைஞர்கள் படுகாயம்
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் அரவிந்தன் (21). இவர் புதூர் ஒட்டகுடிசல் விஜிபி நகர் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைக்கோல் போர் ஏற்றிய டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார்.
இரவு பலத்த மழை பெய்ததால் அரவிந்தன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார்(19), சிவக்குமார் மகன் முத்துக்குமரன் (19), சோ.பள்ளம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் பவுன்குமார்(30) ஆகியோர் வைக்கோல் போர் நனையாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் 4பேரும் காயம் அடைந்தனர்.
வைக்கோல் போரும் தீப்பிடித்து எரிந்தது. படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.