திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திருமேனி முழுவதும் அன்னத்தால் அண்ணாமலையார் அலங்கரிக்கப்பட்டார்.
இறைவனுக்கு நன்றி கூறும் விழா
அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். எனவே இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அன்னாபிஷேகம் நடக்கிறது. மேலும் அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி என்பதால் அன்றைய தினம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது என்ற கருத்தும் உள்ளது.
ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று (30-10-2020) எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும்¸ நினைக்க முக்தி தரும் திருத்தல மாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
100 கிலோ அன்னம்
இதையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. மாலை 3மணி முதல் மடப்பள்ளியில் தயாரான சாதத்தை சிவாச்சாரியார்கள் கருவறையில் இருக்கும் அண்ணாமலையாரின் பானம் ¸ஆவுடையார் ¸சிரசு¸ மற்றும் திருமேனி முழுவதும் அலங்கரிக்கும் பணியை செய்தனர். 100கிலோ அன்னத்தை கொண்டு அலங்காரம் நடைபெற்றது. கர்ப்பக்கிரகம் வாயிற்படி வரையிலும் அப்பம் வடை¸ வில்வம் ¸ பருப்பு¸ காய்கறிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது அதனுடன் அரை அடி உயரமுள்ள அன்னத்தினால் ஆன சிவலிங்கத் திருமேனியும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்னாபிஷேகம் நடந்ததால் மாலை 3 மணி முதல் 6மணி வரை கோயில் நடைசாற்றப்பட்டிருந்தது. மாலை 6 மணியிலிருந்து இரவு 8மணி வரை மட்டும் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு அர்த்தஜாம அபிஷேகத்தின் போது அன்னத்தில் ஆன லிங்கத் திருமேனியை சிவாச்சாரியார்கள் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் வேத மந்திரங்கள் முழங்க கரைத்தனர். பிறகு கருவறையில் அன்ன அலங்காரத்தில் உள்ள அண்ணாமலையாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு அன்னாபிஷேக அலங்காரம் கலைக்கப்பட்டு அந்த அன்னம் அங்கு இருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கல்யாண சுந்தரேஸ்வரர்
அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் 50 கிலோ அரிசி கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அந்த அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் வாழ்நாளில் நாம் சாப்பிடும் உணவிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது ஐதீகமாகும்.
திருநேர் அண்ணாமலை
இதே போல் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலிலும்¸ திருவண்ணாமலை அடுத்த எரும்பூண்டியில் விஜயநகர பேரரசு கால சிவன் கோயிலான வீரட்டேஸ்வரர் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.