திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 20.11.2020அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 29.11.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும்¸ மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த வருடம் கொடியேற்றம்¸ தேரோட்டம்¸ தீபத்திருவிழா¸ தெப்பல் உற்சவம் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளின்படியே நடைபெறும் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்திருந்தார்.
8வது மாதமாக கிரிவலத்திற்கு தடை
தற்போது சுவாமி உற்சவங்கள் கோயிலுக்குள் மட்டுமே நடந்து வருகிறது. நவராத்தரி விழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. துர்க்கையம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களில் நடைபெறும் நவராத்திரி விழா இந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திரம்¸ சித்திரை வருடப்பிறப்பு¸ சித்ரா பவுர்ணமி¸ ஆனித்திருமஞ்சனம்¸ தட்சிணாயன புண்ணியகால பிரம்மோற்சவம்¸ ஆடிப்பூர பிரம்மோற்சவம்¸ விநாயகர் சதுர்த்தி வழிபாடு¸ மகாளய அமாவாசை வழிபாடு¸ நவராத்திரி வழிபாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் 8வது மாதமாக கிரிவலம் செல்வதற்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தீபத்திருவிழாவிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உள்ள பக்தர்கள் டாஸ்மாக்கில் கூட்டம் போடும் போதும்¸கடைகளில் முண்டியடித்து நிற்கும் போதும்¸ போராட்டம்¸ பேரணி¸ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போதும்¸ பஸ்ஸில் நெருக்கி உட்காரும் போதும் பரவாத கொரோனா ஆகம விதிகளின்படி கொடியேற்றி பத்து நாட்கள் சுவாமிக்கு உற்சவம் நடத்தும் போது மட்டும் பரவுமா? என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர்.
இந்நிலையில் 2 நாட்கள் நடைபெறும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா இந்த வருடம் ஒரு நாள் மட்டுமே நடத்த அரசு அனுமதி அளித்தது. இந்த விழாவில் கோயிலுக்குள் குறைந்த அளவே பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி நடைபெறும் பட்டிமன்றம்¸ கருத்தரங்கம்¸ கலைநிகழ்ச்சிகள்¸ விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
நெய் காணிக்கை
இதே போல் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது. சாமி தேர்கள் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளதை பார்க்கும் போது தேரோட்டம் நடைபெறுவது சந்தேகம்தான் என சிவபக்தர் ஒருவர் தெரிவித்தார். பரணி மற்றும் மகாதீப நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க கோயிலுக்குள் மிக குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதற்காக 3500கிலோ நெய்¸ ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இதற்கான நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதோடு மட்டுமன்றி பக்தர்களிடமிருந்து காணிக்கையாகவும் பெறப்படுகிறது.
இதற்காக அண்ணாமலையார் கோயிலில் திருமஞ்சன கோபுரம் அருகில் சிறப்பு கவுன்டர் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் கொள்முதல் விலையை விட குறைவான தொகை பக்தர்களிடமிருந்து பெறப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ நெய்க்கு ரூ.250யும்¸ அரை கிலோ நெய்க்கு ரூ.150யும்¸ கால் கிலோ நெய்க்கு ரூ.80யும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை ஐப்பசிமாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு அபிஷேக பொடி பால் தயிர் மஞ்சள் பன்னீர் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் விபூதி வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷத்தில் நந்தி அபிஷேகத்தை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.