Homeசெய்திகள்2668 அடி உயர மலை மீது தேசிய கொடி ஏற்றிய பாஜக

2668 அடி உயர மலை மீது தேசிய கொடி ஏற்றிய பாஜக

திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையின் மீது பாஜக சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அனுமதி இன்றி மலையேறியவர்களை வனத்துறையினர் கீழே இறங்க செய்தனர். 

நாடு 75 வது சுதந்திர ஆண்டை, தனது வரலாற்று சிறப்பு, பெருமை ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடும் எனவும், 75வது ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டம், 130 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன்  இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். 

இதையடுத்து பாஜகவினர் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை வரவேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில், திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் இருந்து  தேசியக் கொடியுடன்இரு சக்கர வாகன அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டார். 

மாவட்ட ஓபிசி அணி சார்பில் தேசியக்கொடி ஏந்தி நடை பேரணி நடந்தது. இதில் மாநில ஓபிசி அணி தலைவர் திரு சாய் சுரேஷ், மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காந்தி சிலை அருகில் இருந்து காமராசர் சிலை வரை இந்த பேரணி நடைபெற்றது. 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் சார்பாக இன்று காலை திருவண்ணாமலை மலை மீது தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை மாநில துணைத்தலைவர் டி.எஸ்.சங்கர் தலைமையில் மலையேறிய பாஜகவினர் 2660 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றினர். மகாதீபம் ஏற்றப்படும் இடத்தின் அருகில் உள்ள பாறை மீது 75 அடி நீளமுள்ள தேசியக் கொடி கட்டப்பட்டது. 

மாவட்ட தலைவர் வெங்கடேசன், நகரத் தலைவர் செந்தில், துணைத் தலைவர் கணபதி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் சந்திரன், துணைத்தலைவர் விஜயராஜ், புதுப்பாளையம் ஒன்றிய தலைவர் விக்னேஷ், மாவட்ட செயலாளர் முருகேசன், நகர செயலாளர்கள் சம்பத், சரவணன், ரமேஷ், செங்கம் நகரச் செயலாளர் அஜித்குமார் உட்பட பலர் மலையேறினர். 

திருவண்ணாமலை மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலையேற தடை உள்ள நிலையில் பாஜகவினர் மலையேறிய தகவல் கிடைத்தும் பதறி போன வனத்துறையினர் காலை 9-30 மணியளவில் மலையேறினர். பிறகு மலைமீது இருந்த பாஜகவினரை கீழே இறங்கச் செய்தனர். 

வனத்துறையின் அனுமதி பெற்று தேசிய கொடி ஏற்றியதாக ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுபற்றி வனச்சரக அலுவலர் சீனிவாசனிடம் கேட்ட போது மலையேற அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை. தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு என்பதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 

See also  பாதுகாப்பு குறைபாடு-கலெக்டர் அதிருப்தி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!