திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிடாரி அம்மன் சன்னதி முன்பு முருகர் எழுந்தருளி எட்டுத் திக்குகளிலும் அம்பு எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக நவராத்திரி 9ம் நாளான நேற்று பராசக்தி அம்மன் மகிஷாசூரமர்த்தினிஅலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும்¸ பஞ்சபூத தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கடந்த 17ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் பராசக்தி அம்மன் அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் காட்சியளித்தார். 18ந் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும்¸ 19ந் தேதி ஸ்ரீகெஜலட்சுமி அலங்காரத்திலும்¸ 20ந் தேதி ஸ்ரீமனோன்மணி அலங்காரத்திலும்¸ 21ந் தேதி ஸ்ரீரிஷப வாகனம் அலங்காரத்திலும்¸ 22ந் தேதி ஸ்ரீஆண்டாள் அலங்காரத்திலும்¸ 23ந் தேதி ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்திலும்¸ 24ந் தேதி லிங்கபூஜைஅலங்காரத்திலும் அம்மன் காட்சியளித்தார்.
நேற்று 25ந் தேதி நவராத்திரி 9ம் நாள் உற்சவம் மிகவும் கோலாகலமாக நடந்தது. மாலையில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளித்தார் அதனைத் தொடர்ந்து நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெரிய பட்டம் சுவாமிநாத சிவாச்சாரியார் மகிஷாசூரமர்த்தினிஅம்பாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க கணேசன் ஓதுவார் திருமுறை பாடல்கள் பாட சோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீப ஆராதனை நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து அம்பாள் புறப்பட்டு உண்ணாமுலை அம்மன் சன்னதி பின்புறம் உள்ள எதாஸ்தானத்திற்கு சென்றடைந்தார்.
வழக்கமாக 10வது நாள் சேரியந்தல் கிராமத்தில் நடைபெறும் முருகப்பெருமான் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு விஜயதசமி திதி இன்று மதியமே முடிவடைவதால் ஒன்பதாம் நாளான நேற்றே மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதி முன்பு எளிமையாக நடைபெற்றது.
நவராத்திரி உற்சவம் என்பது அம்பாளுக்கு உரியது மற்ற அம்மன் ஆலயங்களில் இந்த நவராத்திரி உற்சவத்தில் அம்பாள் வெளியே சென்று சூரசம்ஹாரம் செய்வது என்ற நிகழ்வு நடைபெறும். ஆனால் இங்கு அண்ணாமலையார் பிரதானம் என்பதால் வள்ளி தேவயானை சமேத முருகப்பெருமான் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பிடாரி அம்மன் சன்னதி முன்பு முருகர் எழுந்தருளினார். அவர் முன்பு கோயில் பெரிய பட்டம் சுதன் சிவாச்சாரியார் எட்டுத் திக்குகளிலும் அம்பு எய்த சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது. இந்த விழா கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
இந்த நவராத்திரி உற்சவத்தில் உள்துறை கண்காணிப்பாளர் வேதமூர்த்தி¸ மிராசு ரகுராமன்¸ மிராசு விஜயகுமார்¸ மணியம் செந்தில்¸ அமீனா அண்ணாமலை¸ஜவான் சிவா¸ வேதபாராயணம் குட்டி அருணாச்சலம் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.