Homeசெய்திகள்மலை மீதிருந்து வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்தது

மலை மீதிருந்து வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்தது

திருவண்ணாமலை மலை


சில மணி நேர மழைக்கே 
தாங்காத திருவண்ணாமலை

மாணவர்கள் குருகுலத்தை 
வெள்ளம் சூழ்ந்தது 

திருவண்ணாமலையில் விடிய¸ விடிய பெய்த மழையினால் வீடு இடிந்தது. 3 பசு மாடுகள் இறந்தன. கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. 

திருவண்ணாமலை¸ தண்டராம்பட்டு¸ கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் நேற்று இரவு இடி¸ மின்னலுடன் கன மழை பெய்தது. கீழ்பென்னாத்தூரில் அதிகபட்சமாக 105.60மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து தண்டராம்பட்டில் 72.80 மில்லி மீட்டரும்¸ திருவண்ணாமலையில் 48மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. விடிய¸ விடிய பெய்த மழையினால் ஏரிகள் நிரம்பின. இனாம்காரியந்தல் ஏரி¸ கனபாபுரம் ஏரி ஆகியவை நிரம்பி கோடி போயின. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நீண்ட வருடங்களுக்கு பிறகு நிரம்பி கோடி போகும் நிலையில் உள்ளது. 

இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை கோசாலை கிராமத்தில் சத்யசேத்னா ஆசிரமத்தை ஒரிசாவைச் சேர்ந்த ஆத்மானந்தஜி என்பவர் நடத்தி வருகிறார். இங்குள்ள குருகுலத்தில் மாணவர்கள் தங்கி வேதங்களையும்¸ தியானங்களையும் கற்று வருகின்றனர். இவர்களை தவிர வெளிநாட்டவர்கள்¸ வடஇந்தியர்கள் தங்கி தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பலத்த மழையில் திருவண்ணாமலை மலை மீதிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து இறங்கி அடிஅண்ணாமலை பகுதிக்கு வந்து சத்யசேத்னா ஆசிரமம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. பாதி வீடு மூழ்கும் அளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆசிரம பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்தன.

திருவண்ணாமலை மலை

இதே போல் அடிஅண்ணாமலை காலனிக்குள் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள் வாளிகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். பல வீடுகளின் முன்பு தண்ணீர்; வற்றினாலும் சேரும்¸ சகதியுமாக இருந்ததால் மக்கள் வீட்டை வீட்டு வெளியே வர சிரமப்பட்டனர். ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக மலை மீதிருந்து வரும் மழை நீர் அடிஅண்ணாமலை ஏரியை முழுமையாக சென்றடையாமல் ஊருக்குள் புகுந்து விடுவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

திருவண்ணாமலை தாசில்தார் வெங்கடேசன்¸ வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி மற்றும் வருவாய்த்துறையினர்¸ அடிஅண்ணாமலை ஊராட்சி மன்றத் தலைவர் நவநீதம் ஆறுமுகம்¸ துணைத் தலைவர் ராமஜெயம் ஆகியோர் சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் தண்ணீர் புகாதிருக்க தற்காலிக கால்வாய் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.  குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழையாமல் இருக்க சுவர் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓடை ஆக்கிரமிப்பு குறித்து  தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்ட போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

அபாய மண்டபத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மலையிலிருந்து நீரில் அடித்து வரப்பட்ட மணல் தேங்கியது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

மின்னல் தாக்கியதில் கொளக்கரவாடியில் முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடும்¸ கனபாபுரத்தில் 2 பசு மாடுகளும் இறந்தன. வீடு ஒன்று இடிந்து விழந்தது. இந்த மழையினால் நிலங்களில் நெல்¸உளுந்து¸ வேர்க்கடலை போன்றவைகளை பயிரிடலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். 

See also  புதிய பஸ் நிலையத்திற்காக விலை பேசப்படும் பெட்ரோல் பங்க்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!