முட்புதர்,அசுத்தங்கள் மத்தியில் சிவன் கோயில்
கலசப்பாக்கம் அருகே 700 ஆண்டு கால கோயிலின் பரிதாப நிலை
வானமே கூரையாக மரகத லிங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் சிதிலடைந்தும், முட்புதர் மண்டியும், கழிப்பிடங்கள் மத்தியிலும் பரிதாபமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் முதலில் கோயிலை அமைத்தவர்கள் பல்லவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவர்கள் கட்டிய குகை கோயில்கள் உள்ளன. அதன் பிறகு திருவண்ணாமலை, ஆவூர் போன்ற பல ஊர்களில் சோழர் ஆட்சி காலத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்கள் கட்டப்பட்டன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தேவிகாபுரம் பெரிய நாயகி கோயில், நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் கோயில் ஆகியவை விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாகும்.
இப்படி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தாலும், கணக்கில் வராத பல கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. அதில் ஒன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள அணியாலை சிவன் கோயில் ஆகும்.
இக்கோயில் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கருங்கல், செங்கல் கலந்து கட்டப்பட்டுள்ள இக்கோயில் தூண்கள் கலைநயமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் கல்வெட்டும் உள்ளது. கோயிலின் பெரும்பகுதி இடிந்து விட்ட நிலையில் அழகிய லிங்கம் வெட்ட வெளியில் காட்சியளித்து கொண்டிருக்கிறது.
கோயிலை சுற்றிலும் உயரமாக வளர்ந்துள்ள மரங்கள், செடி, கொடிகள், புதர்கள் உள்ளன. இதன் காரணமாக இயற்கை உபாதையை கழிக்க கூடிய இடமாக இப்பகுதி மாறி உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
இது குறித்து அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கூறியதாவது,
இக் கோயில் சிதிலமடைந்து 150 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். அதற்கு முன்பெல்லாம் பூஜைகள் நடந்ததாக எங்களது முப்பாட்டன்கள் சொல்லியதாக கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த கோயிலுக்கு உண்டான நிலங்கள் பற்றி தெரியவில்லை. தற்போது 5 சென்ட் இடம் தான் உள்ளது.
ஒரு தூணில் நாமம், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயில் இடிந்து விட்டால் இங்கு வேறு என்ன இருக்கிறது? என்பது தெரியவில்லை. இந்த கோயில் மட்டும்தான் எங்கள் ஊரில் பழைய கோயிலாகும். இதை தவிர வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழங்காலத்து பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது.
பழமை வாய்ந்த இந்த கோயிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர், ஆனால் கோயில் இருந்தும் காப்பாற்ற முடியாத நிலையும், பூஜை செய்ய முடியாத நிலையும், ஊருக்கு பெருமை சேர்ந்த கோயில் தற்போது அழிந்து கிடப்பதும் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
படங்கள்-பார்த்திபன்
லிங்கம் மரகத்தால் ஆனது
இந்நிலையில் அணியாலை சிவன் கோயில் நிலை குறித்த பதிவும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் கோயிலின் சுற்றுப்புறங்களை தூய்மை படுத்தி சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்துள்ளனர். மேலும் இது மரகத லிங்கம் என்று பூசாரிகள் தெரிவித்தனர்.
மரகதக் கற்களைப் பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிலைகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மன்னர்களும், பேரரசர்களும் கருதினர். மேலும் மரகதக் கல் தோஷங்கள் இல்லாதது என்றும் அவர்கள் கருதியதால் பல கோயில்களில் லிங்கத்தை மரகத கல்லில் வடிவமைத்தனர். மரகத லிங்க வடிவில் உள்ள சிவபெருமானை வழிபடுவதால் அனைத்து துன்பங்களும், தோஷங்கள் நீங்கும், மேலும் செழிப்பும், ஆரோக்கியமும், கல்வியறிவும் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
Wayanad, Adiperku, Rainy