தமிழகத்தில் பாஜகதான் எதிர்கட்சி என திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா கூறினார்.
கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை என்றால்¸ அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைக்கலாமா? என்றும், மருத்துவ கல்லூரி தந்த மோடியை வரவேற்று எ.வ.வேலு பேனர் வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் மீண்டும் எல்டிடிஇயை உளவுத்துறை அதிகாரி ஒருங்கிணைக்க உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் பேசும் போது குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசின் 8வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது¸
மோடி இருக்கிறார். கொரோனா வராது என மக்கள் நம்புகின்றனர். 200 கோடி தடுப்பூசிகளை 100 சதவீதம் இலவசமாக அளித்து மக்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறது மோடி அரசாங்கம்.
தமிழ்நாட்டில் தகுதியானவர்கள் மந்திரிகளாக இல்லை. கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு காந்தி என பெயர். அவர் இப்போது மந்திரி. ஜெயலலிதா ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். தகுதியானவர்கள் கையில் ஆட்சி இல்லாததால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் இடும்பன்¸ இளையனார் கோயில் ஆக்கிரமிப்பு போன்று 450 வழக்குகள் உள்ளது. இந்து அமைப்புகளை ஒன்று சேர்த்து இதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் இந்து விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் சிலுவை அணிந்த மந்திரி தேரை வடம் பிடித்து இழுக்கிறார்.என்ன அராஜகம்? திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தனது மனைவிக்கு கட்டின தாலிக்கு நியாயம் தெரியாதவர்கள். நெற்றியில் வைத்த பொட்டுக்கு தியாகம் செய்யாதவர்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை வைக்கின்றனர் அப்படி என்றால் அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைக்கலாமா? அரசியல் களத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய கட்சி திமுக ஆகும். லாக்கப் டெத்¸ நித்தம் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுகவை மூட்டை கட்டி அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என ஊடக நண்பர்கள் கேட்கின்றனர் பாஜக தான் எதிர்க்கட்சி. அழுகிப்போன பிரிவினைவாத சித்தாந்தத்துக்கு எதிரான கட்சி பாஜக.
டெல்லியில் ஒரு முக்கிய நிர்வாகி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரி பற்றி விசாரிக்கிறார். அவர் மீது 5¸ 6 அவர்கள் வந்து இருப்பதாகவும் அதில் தமிழகத்தில் எல்டிடிஇ குழுவை மீண்டும் ஒருங்கிணைக்கப் போவதாக ஒரு புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். ஆபத்தான சூழ்நிலையில் தமிழகம் உள்ளது. வெடிமருந்து மீது மக்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமரோடு 18 தமிழர்களை கொன்ற பேரறிவாளனை தமிழக முதல்வர் கட்டி பிடிக்கிறார் என்றால் அவர் என்ன மனநிலை கொண்டவர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் திமுக தமிழக விரோத கட்சி¸ ஸ்டாலின் தமிழக மக்களின் எதிரி என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்துக்கு மோடி அரசாங்கம் தந்த 15 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றுதான் எ.வ.வேலுவின் மருத்துவக் கல்லூரி. இதற்கு அவர் மோடிக்கு தான் வரவேற்பு அளிக்க வேண்டும். மோடியால் வந்த கல்லூரி என்ற வாசகத்துடன் பேனர் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.