இடுப்பு அளவு தண்ணீர்-வெளியே வர முடியாமல் மக்கள் தத்தளிப்பு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி-அதிகாரிகள் பாராமுகம்
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வீடுகளை இடுப்பு அளவு தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் தத்தளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பகலில் வெயில் காய்ந்தும், இரவில் மழையும் பெய்து வருகிறது. கடந்த 11ந் தேதி 127 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 12ந் தேதி 14.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று மாலை 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திருவண்ணாமலை-வேட்டவலம் ரோட்டில் ஒத்தவாடைத் தெருவில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நொச்சிமலை பகுதியும் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள வீனஸ் நகரில் சுமார் 30 வீடுகள் உள்ளன. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீடுகளை இடுப்பு அளவு தண்ணீர் சூழ்ந்திருப்பதால் கடந்த 3 நாட்களாக குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். குடிநீர், பால், காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க முடியமால் தத்தளித்து வருகின்றனர்.
இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள் பாராமுகமாக இருந்து வருவதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வீடுகளை சூழ்ந்திருக்கும் தண்ணீரை வெளியேற்றி குடியிருப்புவாசிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.