Homeசெய்திகள்வங்கி கேஷியர் சாவு -தி.மலை மலை மீது நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

வங்கி கேஷியர் சாவு -தி.மலை மலை மீது நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

வங்கி கேஷியர் சாவு

திருவண்ணாமலை மலை மீது ஏறிச் சென்ற வங்கி கேஷியர் தவறி விழுந்து இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு¸

வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையாரின் கோயிலின் பின்புறம் 2668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையையே சிவனாக நினைத்து பக்த கோடிகள் வணங்கி வருகின்றனர். தீபத்திருவிழாவின் போது மலையேற தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மகாதீபத்தின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டது. மகாதீபம் முடிந்ததும் வழக்கம் போல் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முன்பு மலையேறி இறங்க வழி தெரியாமல் தவித்த ரஷ்ய நாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டனர். ஆனாலும் ஆர்வகோளாறின் காரணமாக சிலர் மலையேறி வருகின்றனர். மேலும் மலையேறும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவண்ணாமலை போளுர் ரோட்டில் ஜெயகிருஷ்ணா என்ற பெயரில் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருபவர் விஜய்ஆனந்த். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ராயர்கிருஷ்ணமூர்த்தியின் மகனான இவர் பல வருடங்களாக சிறுவர்-சிறுமியர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சியை அளிக்க முடிவு செய்தார். 

See also  திருவண்ணாமலை அதிமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை

இதற்காக விருப்பம் தெரிவித்த 5 சிறுவர்கள் மற்றும் ஜனனி என்ற சிறுமியுடன் அவர்களது பெற்றோர்கள் சென்றனர். இதில் கார்த்தி(வயது 9) என்ற தனது மகனுடன் ஆனந்தராஜ்(42) என்பவரும் சென்றிருந்தார். இன்று அதிகாலை மலையேறும் பயிற்சியை மேற்கொண்டனர். கந்தாஸ்ரமம் தாண்டி 100 மீட்டர் சென்றபோது ஆனந்தராஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில்  தவறி விழுந்த அவர் பரிதாபமாக அங்கேயே இறந்தார். மற்றவர்கள் பாதுகாப்பாக கீழே இறங்கி விட்டனர். 

வங்கி கேஷியர் சாவு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை இடுக்குப்பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த ஆனந்தராஜ் திருவண்ணாமலை பாங்க் ஆப் பரோடாவில் கேஷியராக பணிபுரிந்து வந்தார். வருவாய் துறையினர்¸ தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் அவரது உடலை மலைமீதிருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். ஆனந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மகனின் பயிற்சிக்காக சென்றவர் பிணமாக திரும்பி வந்ததை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

See also  தொழிலாளி மரணம் -மருத்துவமனை முற்றுகை

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மலை ஏறும் வழியான பேகோபுரம் எதிரில் உள்ள வழியை பயன்படுத்தாமல் தடையை மீறியும்¸ உரிய அனுமதியின்றியும் கந்தாஸ்ரமம் வழியாக மலையேறும் பயிற்சிக்கு முதன்முறையாக சென்றது தெரியவந்தது. 

இது சம்மந்தமாக மலையேறும் பயிற்சியை அளித்த விஜய்ஆனந்த்¸ பச்சையப்பன் ஆகிய இருவரையும் போலீசார் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் குரங்கணி மலைமீது 2018ம் ஆண்டு மலையேறும் பயிற்சியை மேற்கொண்டவர்களில் 22பேர் தீயில் கருகி பலியானதை தொடர்ந்து தமிழக அரசு வனப்பகுதிகளில் மலை ஏற தடைவிதித்தது. 8 மாதங்களுக்கு பிறகு இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. மலையேறுபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் செல்ல வேண்டும்¸ எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள்¸ மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது¸ மலையேறும் பயிற்சியை மேற்கொள்பவர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்¸ 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதேபோல்¸70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மலையேற்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. 

ஆனால் திருவண்ணாமலை மலைமீது கண்காணிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த மலைமீது முதன்முறையாக மலையேறும் பயிற்சி நடந்திருப்பதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!