திருவண்ணாமலையில் பொன்ராஜன் ஜவுளிகடைக்கு வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பாததால் அந்த கடை முன்பு அவரது பெற்றோர்கள் விடிய விடிய காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது 24 வயதுடைய மகள் திருவண்ணாமலை தேரடி தெருவில் உள்ள பொன்ராஜன் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வேலைக்கு வந்த அந்த பெண் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் மகளுடன் வேலைக்கு சென்று வரும் தோழியிடம் விசாரித்ததில் இரவு 9 மணிக்கு வேலை முடிந்து பஸ் ஏற சென்ற போது கடையிலேயே டிபன் பாக்ஸ்சை வைத்து விட்டேன், எடுத்து வருகிறேன் என சொல்லி விட்டு சென்றதாக தெரிவித்தார்.
இதனால் மகளை தேடி பெற்றோர்கள் பொன்ராஜன் கடைக்கு சென்றனர். அதற்குள் கடை மூடப்பட்டிருந்தது. கடையில் வேலை செய்பவர்களிடம் செல்போனில் கேட்ட போது அந்த பெண் மீண்டும் கடைக்கு வந்ததை பார்த்ததாக கூறினார்களாம். தங்களது மகள் பூட்டிய கடைக்குள் சிக்கியிருக்கலாம் என்று பதட்டமடைந்த பெற்றோர் கடை உரிமையாளரிடம் போன் செய்து கடையை திறக்க கூறியுள்ளனர்.
அதற்கு அவர் காலையில் தான் கடையை திறக்க முடியும் என கூறிவிட்டதால் பெற்றோர்கள் கவலையுடன் அந்த கடை முன்பு விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் அங்கு வந்து பெற்றோர்களிடம் விசாரித்தனர். பிறகு கடை திறக்கும் வரை கடைமுன்பு காத்திருந்தனர். காலை 9 மணிக்கு கடை திறக்கப்பட்டதும் கடைக்குள் சென்று பெண்ணை தேடினர். ஆனால் பெண் கிடைக்கவில்லை.
சிசிடிவி கேமராவை பார்த்தபோது, பெண் கடைக்கு வெளியே சென்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.