Homeசெய்திகள்போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

ஜனவரி மாதம் போளூர் பாலம் திறக்கவில்லை என்றால் எ.வ.வேலு தலை மீது எனது கார் ஓடும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு 2013ல் வெளியானது. ஆனால் 2019ம் ஆண்டுதான் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இன்னும் இப்பணி முடியாமல் உள்ளது.

பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ரயில்வே லைனை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

பாலம் கட்டும் பணி நீடிப்பதால், நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்கள், ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பைபாஸ் ரோட்டில் மட்டும் தற்போது நின்று செல்கிறது. பாலம் கட்டும் பணியின் காரணமாக நகரத்தின் பல முக்கிய பகுதிகள் குண்டும் குழியுமாக உள்ளது. ஆம்புலன்ஸ்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

மக்கள் படும் சிரமங்களை அடுத்து போளூர் பகுதி வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த ஜூலை மாதம் 27ந் தேதி சித்தூர்-கடலூர் நெடுஞ்சாலையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர் பாலம் விவகாரம் எ.வ.வேலு-அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்
file photo

இந்நிலையில் கடந்த 7ந் தேதி போளூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் போளூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது,

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் முதலமைச்சருடைய வேட்பாளராக தரணி வேந்தன் நின்றார். எங்கள் ஆட்சிக்கு எப்படி மார்க் போட்டார்கள் தெரியுமா? ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, மயிலம், செஞ்சி என ஆறு தொகுதிகள் இந்த அடங்கி இருக்கின்றன.

See also  குடிநீர் பிரச்சனை-கண்டு கொள்ளாத நகராட்சி

அந்த வாக்குகளை எண்ணிப் பார்க்கின்ற போது எங்களுக்கு அதிக மார்க் போட்டது போளூர் தொகுதி தான். 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க் போட்டது போளூர் தொகுதி தான். சபாஷ், ஆட்சியை சிறப்பாக நடத்துங்கள் என மார்க் போட்டு இருக்கிறார்கள். என்னிடம் இங்கு பல கோரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. போளூரை நகராட்சியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். காலம் கனியும்.

போளூரில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வியாபார பெருங்குடி மக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார்கள். இப்போது இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்(அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக) அதில் பங்கேற்றார். வரவில்லை என்றால் நாளைக்கு வியாபாரிகள் கோபித்து கொள்வார்கள் அல்லவா? அந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எங்கள் பங்குக்கு சண்முகம்(திமுக பேரூராட்சி தலைவரின் கணவர், வியாபாரிகள் சங்கத் தலைவர்) சென்று உட்கார்ந்து விட்டார்.

போளூர் பாலம் விவகாரம் எ.வ.வேலு-அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்
file photo

இந்த ஊர் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமா? இல்லையா? எனக்கு வாழ்க்கையில் நாடகம் போடத் தெரியாது. உண்மைதான் பேசுவேன். என்னுடைய குணம் அது. 20-3-2018-ல் பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டது. நாங்கள் 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்தோம். இடைப்பட்ட காலம் 3 ஆண்டு காலம். 18 மாதத்தில் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

எனது துறையின் சார்பாக முதன்முதலாக அந்த பைலை நான் தட்டி எடுத்தேன். அதில் இரண்டு பணிகள் இல்லை. ரயில்வே பாலம் கட்ட வேண்டும் என்றால் ரயில்வே துறையிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் இடம் எவ்வளவு எடுக்க வேண்டும், அதற்கு எவ்வளவு பணம் ஆகும்? அந்த பணத்தை அரசு சார்பாக கொடுக்கிறோம் என்று திட்ட மதிப்பீடு தயார் செய்து விட்டு நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.

See also  கையோடு பெயர்ந்து வரும் புதிய தார் சாலை

நோட்டீசை கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை கொடுத்து நிலத்தை எடுத்து வைத்து விட்டு ரயில்வே துறையில் அனுமதி பெற்று, அதற்கு பின்னால் தான் பாலங்களை கட்டுகிற பணிக்கு வர வேண்டும். அரைகுறையாக நிலத்தை எடுக்காமல், ரயில்வே துறையிடம் உரிய அனுமதி பெறாமல் எதுக்குப்பா அவ்வளவு அவசர அவசரமாக டெண்டர் விடுகிற பழக்கம்?

பணிகள் நடைபெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்த பணியை எடுத்திருந்த ராணிப்பேட்டை ஒப்பந்ததாரரை உன் மீது நடவடிக்கை எடுக்கட்டுமா? என கேட்டதன் விளைவு அந்தப் பணியை அதோடு முடித்துக் கொண்டு சென்று விட்டார். அதற்கு பின்னால் 3ஆயிரத்து 450 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக ரூ.7 கோடியே 63 லட்சத்துக்கு இந்த கையால்தான் கோப்பில் கையெழுத்து போட்டு பணத்தை ஒதுக்கி தந்தேன்.

நமது மாவட்ட வருவாய் அலுவலரின் ஒத்துழைப்போடு நிலத்தை கையகப்படுத்தி அதற்கு பின்னால் போளூரைச் சேர்ந்த புது ஒப்பந்தாரை கூப்பிட்டு அவருக்கு பணத்தை ஒதுக்கி இன்றைக்கு பாலத்தை கட்டுகிற பணியையும் ஏற்பாடு செய்திருக்கிறேன். ரயில்வே துறையில் பாலத்தை கட்டுகிற அனுமதி பெற்று இருக்கிறேன்.

நியாயமாக யார் போராட்டத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்? நான் மந்திரியாக இல்லை என்றால் நான் தான் தலைமை தாங்கி போராட்டத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு காலம் பாலம் ஏன் கட்டப்படாமல் தொய்வாக இருந்தது? நிலத்தை கையகப்படுத்தாமல் ரயில்வே துறையிடம் அனுமதி பெறாமல் இந்த பாலம் கட்டுவதற்கு ஏன் அவ்வளவு அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டது ? அதுக்கு ஒரு உண்ணாவிர போராட்டம் நடந்திருக்கிறது.

See also  கேஸ் கம்பெனிகள் மீது அதிகாரியிடம் சராமாரி புகார்

நான் ரொம்ப வேகமாக சென்று கொண்டிருக்கிறேன். அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்கிறேன். பொங்கல் தினத்தில் என்னுடைய வண்டி போளூர் ரயில்வே பாலத்தில் தான் செல்லும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

அதிமுக ஆட்சி காலத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல், ரயில்வே துறையில் அனுமதி பெறாமல் டெண்டர் விடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதியான போளூரில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்றதையும் சுட்டி காட்டியிருந்தார்.

இந்நிலையில் போளூர் சட்டமன்ற தொகுதி நம்பேடு கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அதிமுக சார்பில் நடைபெற்ற பேரரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், போளூர் எம்.எல்.ஏ-வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கிற எ.வ.வேலு போளூரில் நடந்த நிகழ்ச்சியில் வருகின்ற பொங்கல் அன்று அந்த மேம்பாலத்தில் என்னுடைய கார் போகும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார். எ.வ.வேலு அவர்களே, வருகின்ற தைப்பொங்கல் அன்று உங்களுடைய கார் அந்த மேம்பாலத்தில் செல்லவில்லை என்றால் உங்களுடைய தலையின் மீது என்னுடைய கார் ஓடும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.

எ.வ.வேலுவின் தலைமீது கார் ஓடும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பேச்சு- Link

https://www.newsthiruvannamalai.com/2024/09/agri-krishnamurthy-sensational-speech.html

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!