சேத்துப்பட்டில் 200 வருட பழமையான விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு ராஜாஜி தெருவில் 200 வருடம் பழமை வாய்ந்த வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்றும், ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்றும் நடைபெறும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த பழமையான கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த கோயிலை கோர்ட்டு உத்தரவுபடி அதிகாரிகள் நாளை இடிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. இத்தகவல் அப்பகுதி மக்களுக்கும் பரவியது.
இதையடுத்து 200க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாலை சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், வியாபாரிகள் சங்க நிர்வாகியுமான முனிரத்தினம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர், இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக சேத்துப்பட்டிலிருந்து போளூர், ஆரணி, வந்தவாசி, செஞ்சி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள், போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் கோயில் தெரு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சொல்லி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் இருப்பதை பதிவு செய்ய சம்மந்தப்பட்ட அரசு அலுவலகர்கள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பு வந்திருக்கிறது, பொதுமக்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்ததற்கு அதிகாரிகளே காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளும், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என முக்கிய பிரமுகர்களும் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் போராட்டத்தால் சேத்துப்பட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.