மோடி பிறந்த நாளில்
ரூ.5லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் பா.ஜ.க தொடர்ச்சியாக விழா நடத்தி வருவது மாற்று கட்சியினரின் புருவங்களை உயர வைத்துள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பா.ஜ.க காய்களை நகர்த்தி வருகிறது. இம்முறை சட்டமன்றத்தில் பா.ஜ.கவின் காலடி பட வேண்டும் என முனைப்பில் அதன் தமிழக தலைவர் எல்.முருகன் கட்சி வளர்ச்சியில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார். அதன் பலனாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை கணிசமான உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும் பா.ஜ.க 60 இடங்களில் வெற்றி பெறும் என பேட்டி ஒன்றில் முருகன் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அசத்தி வருகிறது. கந்த சஷ்டி பாடலை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட வேல் பூஜையிலிருந்து ஆரம்பித்து சுதந்திரதின விழா¸ மாவட்ட மகளிரணி கூட்டம்¸ மாவட்ட இளைஞரணி கூட்டம்¸ வழக்கறிஞர் அணி கூட்டம்¸ உறுப்பினர் சேர்க்கை முகாம் என வரிசையாக நிகழ்ச்சிகளை அக்கட்சி நடத்தியுள்ளது.
பாரதப்பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை 2 நாட்களுக்கு முன்பே பா.ஜ.க கொண்டாட ஆரம்பித்து விட்டது. இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம்¸ செங்கம் ரோடு சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில்¸ கிரிவலப் பாதை பஞ்சமுக தரிசனம் பகுதி¸ வேங்கிக்கால் ஓம்சக்தி நகர்¸ பெரிய தெரு¸ உள்ளிட்ட 5 இடங்களில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அருணை எம்.ஆனந்தன்¸ தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் இ.நடராஜ்¸ மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர்கள் எஸ்.வினோத் கண்ணா¸ கே.வினோத்குமார் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் மோடியின் பிறந்த நாள கேக் வெட்டியும்¸ நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி¸ புடவை¸ பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதே போல் மாவட்டத் தலைவர்; ஆர்.ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார்¸ மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.கருணாகரன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நாச்சானந்தல்¸ மெய்யூர்¸ அத்தியந்தல்¸ சே.அகரம்¸ அய்யம்பாளையம்¸ சு.வாளவெட்டி¸ திருவண்ணாமலை தேனிமலை¸ தியாகி அண்ணாமலை நகர்¸ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களில் இனிப்பு¸ 3 வகையான வெரைட்டி ரைஸ்¸ வடை¸ பாயாசத்துடன் மதிய உணவு¸ உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால்¸ மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு- புத்தகம் வழங்கி மோடி பிறந்த நாளை கொண்டாடினர்.
இதில் தியாகி அண்ணாமலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி.அணி துணைத்தலைவர் தலித்பாண்டியன் கலந்து கொண்டார்.
அக்டோபர் 2 வரை தி.மலை பா.ஜ.க பிசி
மோடியின் பிறந்த நாளை சேவை தினமாக கொண்டாடி வருவதாகவும்¸ வருகிற அக்டோபர் 2ந்தேதி வரை தினமும் ஒரு மாநில நிர்வாகிகளை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.
பா.ஜ.கவின் திடீர் எழுச்சி மாற்று கட்சியினரின் புருவங்களை உயர வைத்துள்ளது.