போலி ஆவணம் மூலம் ஆசிரம இடம் ஆக்கிரமிப்பு?
சிக்கலில் திருவண்ணாமலை சக்தி தியேட்டர்
திருவண்ணாமலை குகை ஆசிரமத்திற்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து சக்தி திரையரங்கம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலை மீது ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி என அழைக்கப்பட்ட குகை நமச்சிவாயர் தனது சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து தன்னுடைய 100வது வயதில் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்து தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார்.
அந்த இடத்தில் குகை நமச்சிவாயர் கோயில் கட்டப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1லட்சம் சதுர அடி நிலத்தில் சக்தி திரையரங்கம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளக்க உத்தரவிட்டது. அதன்படி அளவிடும் பணி இன்று தொடங்கியது. சக்தி திரையரங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் அளவீடு செய்யப்பட்டன. இப்பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை திருத்தொண்டர்கள் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில் குகை நமச்சிவாயர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மோசடியாக பல்வேறு ஆவணங்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இவற்றை மீட்டெடுப்போம். மனிதாபிமானம் அடிப்படையில் வேண்டுமானால் மாவட்ட பதிவாளர்¸ சம்மந்தப்பட்ட இணை ஆணையர்¸ தரும ஸ்தாபன நிர்வாகி ஆகிய கூட்டு குழு முடிவு செய்து ஆக்கிரமித்துவர்களிடம் வாடகையை நிர்ணயித்து கொள்ள சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.
திருவண்ணாமலை சக்தி திரையரங்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த விசுவநாதன் கட்டியது ஆகும். தற்போது இது வேலூரைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபராக இருந்த கோபால் வசம் உள்ளது. இது குறித்து அந்த திரையரங்க நிர்வாகியிடம் கேட்டதற்கு இந்த தியேட்டரை கோர்ட்டு ஏலம் மூலம் பணம் கட்டி எடுத்தோம். கலெக்டர் உத்தரவின்படி வருடத்திற்கு ரூ.2400 தரை வாடகை செலுத்தி வருகிறோம் என்றார்.