திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் பதவி கிடைக்க வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) இட ஒதுக்கீடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக லோக் ஆயுக்தா காவல்துறை விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது, சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு 14 இடங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அளித்த அனுமதியை உயர் நீதிமன்றம் உறுதி செய்த மறுநாள் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
முடாவின் சட்டவிரோத இழப்பீட்டு நில பேரத்தின் மூலம் சித்தராமையாவும் அவரது மனைவி பார்வதியும் பயனடைந்ததாகவும், ரூ.4,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர் இதன் காரணமாக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அவரது வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பார்வதி மற்றும் மகன் யதீந்திர சித்தராமையா ஆகியோர் முடா வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக அமலாக்க இயக்குனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது மனைவி, உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கர்நாடகாவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய டி.கே.சிவக்குமாரை, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் நேரில் சென்று வரவேற்றார்.
அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு வந்த டி.கே.சிவக்குமாரிடம், சித்தராமையா மீது வழக்கு உள்ளதால் நீங்கள் (டி.கே.சிவக்குமார்) முதல்வராக வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியால் திகைத்த டி.கே.சிவக்குமார் அதன்பிறகு சுதாரித்து கொண்டு அண்ணாமலையாரை தரிசிக்க வந்திருக்கிறேன். இங்கு அரசியல் வேண்டாம் என சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார்.
டி.கே.சிவக்குமாரின் முதல்வராக ஆசைப்படுவது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு, கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அவர் முதல்வர் பதவியை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் காங்கிரஸ் தலைமை சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் மூலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டி.கே.சிவக்குமார் முதல்வர் பதவிக்கு வருவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
அதற்கு முன்பாகவே சித்தராமையா வழக்கில் சிக்கி இருப்பதால் முதல்வர் பதவிக்கு வர டி.கே.சிவக்குமார் முயன்று வருவதாகவும், இதற்காக உள்துறை அமைச்சர் ஜி பரமமேஷவா மற்றும் சில முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் அவர் அண்ணாமலையார் கோயிலில் வந்து தரிசனம் செய்து விட்டு சென்றிருக்கிறார். முதல்வர் பதவி கிடைப்பதற்காக அவர் அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்கும் முன்பாக டி.கே.சிவக்குமார், தேர்தலில் வெற்றி பெற வேண்டி அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதோடு, துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. முதல்வர் பதவி கைநழுவி போனது. இம்முறை அதை அண்ணாமலையார் தருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.