திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் மாற்று பாதைகளில் போக்குவரத்தை திருப்பி விட்டு அப்பகுதிகளில் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராம்பிரதீபன், குழு உறுப்பினர்கள் எ.வ.வே. கம்பன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலர் வேல்மாறன், மெட்ராஸ் கே.சுப்பிரமணி, அருணாரவி, திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.பாஸ்கரன், மாவட்ட நகர ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பி.தனகோட்டி, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த கே.சரவணன், தனியார் பேருந்துகள் சங்க இணை செயலாளர், ஜி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
திருவண்ணாமலை நகருக்கு பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளிவில் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, உள்ளூர் மக்கள் தினசரி புழக்கமும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வரும் கார்கள், பேருந்துகளுக்கு நகரின் வெளிப்புறத்தில் அதிக அளவிலான பார்க்கிங் இடம் தேர்வு செய்ய வேண்டும், ஆட்டோக்கள் முறைப்படுத்த வேண்டும், கோயில் பகுதியிலும் கிரிவலப் பகுதியிலும் போதுமான அளவில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் மருத்துவ வசதிகளும் செய்து தர வேண்டும்
திருவண்ணாமலையில் அதிக அளவில் ஆட்டோக்களுக்கு பர்மிட் கொடுக்கிறார்கள். திருவண்ணாமலை நகரில் பர்மிட் உள்ள ஆட்டோக்கள் மட்டும் ஓடினால் எந்த பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது,
விழாக் காலங்களில் தனியார் பேருந்துகளை அனுமதிக்க வேண்டும். வேலூர் ரோடுக்கு செல்வதற்கு இரண்டு, மூன்று வழிகள் உள்ளது. ஆனால் அந்த பாதைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆம்புலன்ஸ் போன்ற ஒரு அவசர தேவைக்கு செல்வதற்கு அந்த பாதைகளை பயன்படுத்தலாம். எனவே சுற்றியுள்ள சாலைகளில் காவல்துறையை பணியமர்த்தி அப்பாதைகளில் போக்குவரத்தை பயன்படுத்தினால் தான் நெரிசல் குறையும். ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியும்.
ரிங் ரோடுகளிலும் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். போக்குவரத்துக்கு அந்தப் பாதை தான் முக்கியம். எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடங்களை ஒதுக்கி தர வேண்டும். வேன், கார், பஸ்களுக்கு தனித்தனி இடங்களை ஒதுக்கி தர வேண்டும். தற்காலிக கழிவறைகளோடு தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுப் பாதைகளை பயன்படுத்தினாலே பாதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விடலாம். அதை ஒரு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் மெயின் ரோட்டை மட்டும் பார்க்கிறோம். மாற்றுப் பாதைகளை பார்ப்பதில்லை. பேகோபுரம் பகுதிகளிலும், பெரியத் தெருவிலும் ஆந்திரா மற்றும் தனியார் வண்டிகள் பார்க்கிங் செல்கிறார்கள். திருமண மண்டபங்கள் இந்த பகுதிகளில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெசில் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை அனுமதிக்க கூடாது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள இடம், கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கிற இடம் அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திண்டிவனம் ரோட்டில் வீட்டுமனைகள் போட்டு இருக்கிறார்கள். அதையும் பார்க்கிங்கிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் சொத்துக்கள் இங்கு இருக்கும், உரிமையாளர்கள் வெளியூரில் இருப்பார்கள். அதை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என்று விளம்பரம் செய்தால் அனுமதி அளிப்பார்கள்.
தீபத்திருவிழாவில் கீழ்பென்னாத்தூர்-வேட்டவலம் சாலைகளில் போக்குவரத்தை நெரிசல் ஏற்படுகிறது. ஒரே பாதையை பயன்படுத்துவதால் விஐபி, ஜட்ஜ்கள் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். எனவே அவர்கள் செல்வதற்கு மட்டும் சென்னை சாலையை பயன்படுத்த வேண்டும். மற்ற வாகனங்களை அவலூர்பேட்டை வழியாக திருப்பி விட்டால் வந்தவாசி, மேல்மருவத்தூர் வழியாக சென்று விடலாம். பாதையை நன்றாக உள்ளது. அரசு பஸ்களையும் அந்த பாதைகள் வழியாக அனுப்பி விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், தன்னை நகருக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து விட்டதாகவும், தான் மேயர் என்று சொல்லியும் அடையாள அட்டையை காட்டினால்தான் விட முடியும் என கெடுபிடி காட்டியதாகவும் ஆவேசமாக தெரிவித்தார்.