Homeசெய்திகள்நல்லதுதான் செய்கிறோமா? எ.வ.வேலுக்கு வந்த டவுட்

நல்லதுதான் செய்கிறோமா? எ.வ.வேலுக்கு வந்த டவுட்

மக்களுக்கு நல்லது செய்கிறோமா? கெட்டது செய்கிறோமா? என சந்தேகம் எழுந்ததாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலை ஜெபிஏ நகரில் திருவண்ணாமலை மாவட்ட நகர ஓட்டல்கள் சங்கத்திற்கான திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 23ம் ஆண்டு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கு மாநில கவுரவ ஆலோசகர் பி.ராமச்சந்திர உபாத்யாயா தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க இணை செயலாளர் ஆர்.முத்துகுமார்,கவுரவ தலைவர் எம்.மண்ணுலிங்கம், செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நகர தலைவர் பி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க சங்க தலைவரும், கட்டட குழு தலைவருமான எஸ்.டி.தனகோட்டி அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

விழாவில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் எம்.வெங்கடசுப்பு, திமுக மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மு.பெ.கிரி எம்எல்ஏ, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல்லதுதான் செய்கிறோமா? எ.வ.வேலுக்கு வந்த டவுட்

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

இங்கு வந்திருப்பவர்கள் அண்ணாமலையாரை சென்று பார்ப்பவர்கள் தான். என்னை தவிர. ஓட்டல் அதிபராக இருக்கிற நீங்கள் வருபவர்களுக்கெல்லாம் நல்ல விருந்து படைப்பது மட்டுமின்றி இன்னொருத்தர் நமது கடைக்கு வர மாட்டாரா? வந்து உணவு அருந்த மாட்டாரா? என்று பார்ப்பவர்கள்.அவர்கள் யாருக்கு சமமானவர்கள் என்று சொன்னால் வானத்தவருக்கு சமம். வள்ளுவர் சொல்வது போல் நீங்கள் எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள்.

திருவண்ணாமலை வளர்கிறது, வேலூர் வளர்கிறது, கோயம்புத்தூர் வளர்கிறது, சென்னை வளர்கிற காரணத்தினால் தான் புதிய புதிய நகரங்கள் எல்லாம் உருவாகிறது. திருவண்ணாமலையில் அண்ணா நகர் ஒரு காலத்தில் கருவேல மரங்கள் மிகுந்த பகுதியாக இருந்தது. அந்த முள்ளை எல்லாம் வெட்டி தான் 67 ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி அங்கு நடத்தப்பட்டது.

இலவச பொருட்காட்சியை பார்ப்பதாக சென்னையில் இருந்து பஸ் விட்டார்கள். அதன் பிறகு வீட்டு வசதி துறை மூலம் அந்த பகுதி கையகப்படுத்தப்பட்டது. டி.ஆர்-ராக இருந்த வரதராஜ் என்னை கூப்பிட்டு இரண்டு பிளாட் வாங்க சொல்லி சொன்னார். ஒரு பிளாட் விலை 5000 ரூபாய். மாடர்ன் கபே ஓட்டல் ஓனருக்கு 4 பிளாட் ஒதுக்கினார்கள். அவர் மீரா என்ற பெயரில் ஓட்டலை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு பிளாட் எனக்கு ஒதுக்கினார்கள். இப்போது ஒரு பிளாட் விலை ரூ.10 கோடி.

காந்திநகர் என்ற ஒரு பகுதி உருவாகவில்லை என்றால் திருவண்ணாமலை வளர்ச்சி அடைந்திருக்காது. நம்முடைய ஊரோடு நிலைமை என்ன? ரோடு எல்லாம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்கிறோமா? கெட்டது செய்கிறோமா? என்ற சந்தேகம் எனக்கு வந்து விடும். உடனே நான் கார்த்தி வேல்மாறனையும், பன்னீரையும் கேட்பேன். ரோடு எல்லாம் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோமே, இந்த ஊருக்கு நல்லது செய்கிறோமா? கெட்டது செய்கிறோமோ? என்று கேட்பேன். நல்லது தான் என்று அவர்கள் சொல்வார்கள்.

எனது வீட்டு அருகில் 4 பேர் நிற்பார்கள், அவருக்கு நான் என்ன பதில் சொல்வது? என்று கேட்பேன். அவர்கள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டிக் கொண்டு விடமாட்டேன் என்பார்கள். அரசாங்க சொத்தில் வீடு கட்டுகிறோமே என்ற உணர்வு இல்லாமல் என் வீட்டை இடித்து விட்டார்கள் என்று சொல்வார்கள். நான் உடனே மாவட்ட நிர்வாகத்தை அழைத்து அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கொடுங்கள் என்று சொல்வேன். சில நேரங்களில் அவர்களுக்கு தேவையான நிதி உதவியை நானே நேரடியாக தருகிறேன்.

நமது ஊர் அந்த காலத்தில் அமைக்கப்பட்டது. இது ஒரு பழமையான நகரம். இங்கு டி.டி.சி.பி விதிமுறைக்கு உட்பட்டு வீடு கட்டலாம் என்றால் எந்த காலத்திலும் நடக்காது. 19 அடி அகலம், 150 நீளத்துக்கு வீடு இருக்கும். இரண்டு பக்கத்திலும் ஐந்து அடி விடுங்கள் என்று சொன்னால் எப்படி விட முடியும்? புதிதாக உருவாக்கக்கூடிய நகரங்கள் டி.டி.சி.பி விதிமுறையை கடை பிடிக்க சொல்லலாம். திருவண்ணாமலை போன்ற பழம் பெரும் நகரங்களுக்கு எல்லாம் வருங்காலத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வீட்டுவசதித் துறை அமைச்சரிடம் கேட்டிருக்கிறேன்.

நீங்கள்(ஓட்டல் உரிமையாளர்கள்) எல்லாம் நகரப் பகுதியை விட்டு விட்டு தூரத்தில் பங்களா கட்டி வாழ்ந்தால் தான் ஊரே தாங்கும். ஓட்டல்கள் இன்றைக்கு அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஓட்டலோடு சேர்ந்து தங்கும் விடுதிகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை ஒரு ஆன்மீக நகரமாக இருக்கிற காரணத்தினால் தான் பல நாடுகளிலிருந்தும். பல ஊர்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் நமது ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு பேரும் வருகின்ற காரணத்தால் ஓட்டலில் வியாபாரம் நடக்கிறது. அவ்வளவு பேரும் தங்க முடிகிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை கூடுகின்ற போது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது உள்ளது. நீங்களும் என்னோடு சேர்ந்து ஒத்துழைத்தால்தான் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடும். இல்லையென்றால் கூடாது.

நல்லதுதான் செய்கிறோமா? எ.வ.வேலுக்கு வந்த டவுட்

ஒரு காலத்தில் சென்னைக்கு போக வேண்டும் என்றால் அரசு சார்பில் ஒரே ஒரு பஸ்தான் இருக்கும். தனியார் பஸ்கள் இரண்டுதான் இருக்கும். அரசு பஸ் சேலத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு செல்லும். அது உடுப்பி ஓட்டலுக்கு முன்னால் நிற்கும். இப்போது அந்த இடத்தில் வண்டி நிறுத்திவிட்டு சென்றால் போக்குவரத்துக்கு நடக்குமா?

திருவண்ணாமலையில் முத்துக்குமாரசாமி முதலியார், பஉச, பத்ராசலம் பிள்ளை இப்படி நான்கு பேர் தான் கார் வைத்திருந்தார்கள். தண்டராம்பட்டு தொகுதியில் எம்.எஸ்.ராதாகிருஷ்ண ரெட்டியார், பராங்குசம் ரெட்டியார் ஆகிய இரண்டு பேர்தான் கார் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அந்த நிலைமையா உள்ளது? வீட்டுக்கு ஒரு கார் என்பது மாறி, வீட்டில் இருப்பவருக்கெல்லாம் கார். அண்ணனுக்கு ஒரு கார், தம்பிக்கு ஒரு கார், அக்காவிற்கு ஒரு கார், 4 காரும் ரிப்பேர் ஆகிவிட்டால் ஸ்பேருக்கு ஒரு கார். இவ்வளவு கார்கள் வரும் என்று தெரிந்தா நகரம் உருவாக்கப்பட்டது?

காலத்தை, நேரத்தை அறிந்து நாம் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்தை தவிர என்ன இருக்கிறது பொருளாதார வளர்ச்சிக்கு? திருவண்ணாமலை, மாவட்ட தலைநகராக உள்ளது. இப்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. போக்குவரத்தை மட்டும் திருவண்ணாமலையில் சரி செய்து விட்டோம் என்றால் ஆன்மீக மக்கள் நம்மை விமர்சிக்காமல் வந்து போவார்கள். ஆன்மீக மக்கள் நம்மை விமர்சிக்கின்ற நிலை உள்ளது.

எங்கும் காராக உள்ளது, ஆட்டோவை நிறுத்தி விடுகிறார்கள், எந்த வழியாக செல்வது? என்ற வெறுப்புணர்ச்சி ஏற்பட்டால் ஆன்மீகப் பெருமக்கள் வருவார்களா? யோசித்துப் பாருங்கள். ஆன்மீக பெருமக்கள் தொடர்ந்து நமது ஊருக்கு வர வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வந்தாக வேண்டும். அவர்கள் பணம், காசா கேட்கிறார்கள்? ஈசியாக வரவேண்டும், கோயிலுக்கு வர வேண்டும், சாமி கும்பிட்டு செல்ல வேண்டும். அவ்வளவுதானே? இதற்கு பெரும் சங்கடமாக உள்ளது நமது பாதைகள்.

சாலையை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதால் பலருடைய பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாகி கொண்டிருக்கிறேன். சாலை விரிவுபடுத்த வேண்டும் என்பது திருவண்ணாமலையை பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் செய்து கொண்டிருக்கிறேன். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், அடிப்படை இதுதான்.

தேரடி தெரு பூ மார்க்கெட்டால் சில நேரங்களில் உள்ளே செல்ல முடியவில்லை. 200 டூ வீலர்கள் நின்றல் எப்படி உள்ளே செல்ல முடியும்? எனவே அப்பகுதி வணிகர்களுக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் காந்திநகரில் ஒரு அங்காடி கட்டப்படுகிறது. இன்றைக்கு புதிய பஸ் நிலையம் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அழகுக்காக அல்ல. கிரிவல பாதையில் பஸ் நிலையம் இருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ரயில்வே கேட்டுக்கு அந்தப்பக்கம் பஸ் நிலையம் இருந்தால் நெரிசலை குறைக்க முடியும்.

நமது கடைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டு போக வேண்டும் என்றால் எப்படி? யோசித்து பாருங்கள். கடைக்கு நேராக கார் வந்து நிற்க வேண்டும், சாப்பிட்டு விட்டு ஈசியாக போக வேண்டும், முடியுமா?

பெரிய தெருவில் வியாபார நிறுவனங்கள் உள்ளது. எந்த வியாபாரத்தையும் மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆங்காங்கே நடக்கிற வியாபாரம் ஆங்காங்கே நடக்க வேண்டும். அவர்கள் கடையில் வேலை செய்கிற 10 பேர் வண்டியை ரோட்டில் விட்டு விடுகிறார்கள். கடைக்கு வருபவர்களும் கடைக்கு செல்ல முடியவில்லை, ரோட்டில் செல்பவர்களும் செல்ல முடியவில்லை.

எனவே சின்னகடைத் தெருவில் பஉச வீடு அருகில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சொந்தமாக இடத்தில் டூவீலர் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடை தொழிலாளர்கள் மாநகராட்சியில் மாத பாஸ் வாங்கி அங்கு வண்டியை நிறுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டல் தொழிலாளர்கள் நலனுக்காக தனது குடும்பத்தினரின் அறக்கட்டளை மூலம் முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என விழாவில் எ.வ.வேலு அறிவித்தார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!