சாத்தனூர் அணையில் கடந்த 2 நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பெடல் படகு சவாரி செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே 1958-ல் காமராஜரால் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணை திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
ஒரு காலத்தில் சாத்தனூர் அணையில் சிவாஜி கணேசன் நடித்த பச்சை விளக்கு, அருணோதயம், ஜெமினி கணேசன் நடித்த சுமைதாங்கி, மாலினி, பாவமன்னிப்பு, ஏவிஎம்.ராஜன் நடித்த ஆண்டவன் கட்டளை, எம்ஜிஆர் நடித்த தேடி வந்த மாப்பிள்ளை, குமரிக் கோட்டம், ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு, அக்கா தங்கை, மாணவன், மணப்பந்தல், விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை என நூற்றுக்கணக்கான சினிமா படபிடிப்புகள் நடந்துள்ளன.
அணையை சுற்றி பார்க்க வசதியாக ரயில் வசதியும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் படிகட்டுகளில் எரிய விடப்படும் வண்ண விளக்குகளில் தண்ணீர் வழிந்தோடி வர்ண ஜாலம் காட்டுவதை பார்க்க ஏராளமான மக்கள் சாத்தனூர் அணைக்கு வருவார்கள். கால போக்கில் அவையெல்லாம் மறைந்து விட்டது.
தற்போது பூங்கா மட்டுமே உள்ளது. சிவன் பூங்கா, நேரு பூங்கா, அசோகா பூங்கா, ஜப்பான் பூங்கா, ராக்கெட் பார்க், எவர் கிரீன் பார்க், ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அறிவியல் பூங்கா, திருவண்ணாமலையில் இருப்பது போன்று இல்லாமல் பெயருக்கு என்று உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். முதலைப்பண்ணை சிறுவர்கள் பார்த்து வியக்கும் இடமாக உள்ளது. நீச்சல் குளத்தில் வாண்டுகள் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வண்ணப்புறாக்கள், லவ் பேர்ட்ஸ், முயல் வளர்ப்பு இடங்களும் உள்ளன.
சிவபெருமான் சிலை, 5 தலை நாகத்தடன் கூடிய கிருஷ்ணர் சிலை, யானை மற்றும் ஒட்டகச் சிவங்கி உருவத்தில் சறுக்கு மரம், 10 அடி உயர டைனோசர் சிலையும், ஆங்காங்கே நீர் ஊற்றுகளும், தொங்கு பாலமும், தொப்பி கோபுர கூண்டு ஆகியவற்றிற்கு சென்று சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்கின்றனர்.
மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது திடீரென நிறுத்தப்பட்டதால் செல்பி பாய்ண்டில் நின்று செல்பி எடுக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பலர் கோயிலுக்கு சென்று விட்டு சாத்தனூர் அணைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அனைத்து வசதிகளும் கொண்ட சுற்றுலா தலமாக சாத்தனூர் அணையை மாற்ற வேண்டும். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு, சாத்தனூர் அணைக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
படங்கள்-பார்த்திபன்