திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் டிசம்பர் 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் திருவிழாவான டிசம்பர் 10-ந் தேதி மகாதேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம்தேதி அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
இதையொட்டி கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் தேரான பெரிய தேர் ரூ.70 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு வருகிற 8-ந் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது.
டிசம்பர் 13-ந் தேதி ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தரும். மகாதீபம் ஏற்ற 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்காக வருடம் தோறும் 3500 கிலோ தூய நெய்யை வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.
தற்போது ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொள்முதல் விலையை விட பக்தர்களிடம் குறைவான தொகை பெறப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என பழைய விலையிலேயே காணிக்கையை கோயில் நிர்வாகம் பெற்று வருவதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் நேரடியாக நெய் காணிக்கைக்கு பணத்தை பக்தர்கள் செலுத்தி ரசீதை பெற்றுச் செல்லலாம். ரொக்கமாக செலுத்த விரும்புவோர் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தலாம்.
நெய் காணிக்கை பெறுவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை துவக்கி வைத்தார். இதில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நெய் காணிக்கை செலுத்தும் கூடுதல் சிறப்பு பிரிவுகள் கோயிலின் முக்கிய இடங்களில் துவக்கப்பட உள்ளது. மேலும் https://annamalaiyar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20343 என்ற கோயில் இணையதளம் மூலமாகவும் காணிக்கை பணத்தை செலுத்தலாம்.
மகாதீபம் ஏற்றுவதற்கான நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு திருவாதிரை அன்று நடைபெறும் ஆருத்திரா தரிசனத்துக்கு பிறகு தீபச்சுடர் (தீப மை) பிரசாதம் வழங்கப்படும்.