திருவண்ணாமலையில் திருமண கோஷ்டியிடம் திருநங்கைகள் அடாவடி வசூலில் ஈடுபட்டனர். இதை படம் எடுத்த போலீஸ்காரரின் செல்போனையும் பறிக்க முயன்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கிரிவலம் வரும் பக்தர்களை திருநங்கைகள் வழிமடக்கி அவர்களிம் பணம் பறிப்பதும், பணம் கொடுக்காதவர்களை கையை பிடித்து இழுப்பதும்,அவர்களது பாக்கெட்டுகளை செக் செய்வதும், எதிர்த்து பேசும் பெண் ஒருவரை குச்சியால் அடிப்பதுமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அண்ணாமலையார் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்ற போது ராஜகோபுரம் நுழைவு வாயிலில் திருநங்கைகள், கும்பலாக நின்று கொண்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை நேரில் பார்த்து அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தார். பக்தர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என திருநங்கைகளுக்கு தக்க அறிவுரை வழங்கும்படியும் சமூக நலத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியை சில திருநங்கைகள் அம்மணி அம்மன் அருகே மடக்கி பணம் கேட்டுள்ளனர். அந்த திருமண கோஷ்டியின் காரின் கதவுகளை திருநங்கைகள் திறப்பதும், பிறகு வாக்குவாதம் ஏற்படுவதும், அதன் பிறகு காரில் இருந்த மணப்பெண் காரில் இறங்கி அதிர்ச்சியுடன் செல்வதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதை படம் எடுத்த போக்குவரத்து போலீஸ்காரரின் செல்போனையும் பறிக்க முயல்வதும், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும், ஒருவரை திருநங்கை அடிப்பதும், மூதாட்டி ஒருவர் அடிக்க வேண்டாம் என கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும், தொலைகாட்சியிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.