திருவண்ணாமலை அடுத்த மலையனூர் செக்கடி காசிவிஸ்வநாதர் கோயிலில் 15 அடி உயரத்தில் வைக்கப்பட்ட மகா சிவலிங்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே மலையனூர் செக்கடி கிராமத்தில் ஸ்ரீ கங்கா தேவி அம்மை உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கிபி 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த கோயில் தண்டராம்பட்டில் இருந்து அரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ளது. தீர்த்தமலை சிவன் கோயில் தோன்றிய காலத்தில் இந்த கோயிலும் தோன்றியது என்பது இந்த பகுதி மக்களிடையே நிலவும் வரலாற்று செய்தியாக உள்ளது. அதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சிவ பக்தர்களிடையே மாலிக்கபூர் (கிபி. 1311) ஆண்டு தென்னிந்தியப் படையெடுப்பின் போது கோயில் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் நிறைந்துள்ளன.
மாலிக்கபூர் என்ற பெயரால் அழைக்கப்படும் மல்காபூர் கிராமம் அருகில் உள்ளது. மேலும் சுல்தான்கள் ஆண்ட கோட்டையின் சிதைந்த மதில்கள் உள்ளதால் கோட்டை மலையனூர் என்பதே இன்றும் அந்த கிராமத்தின் பெயராகவும் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான சில கல் மண்டபங்கள் மிச்சம் இருந்தன. அதில் ஒரு மண்டபத்தில்தான் பழமையான கோயிலில் இருந்த சிவலிங்கத்தை வைத்து வழிபட்டனர்.
மாலிக்கபூர் படையெடுப்பின் போது இந்த கோயில் மட்டும் அழிக்கப்படவில்லை. இங்கிருந்த பெரிய கோட்டையும் அழிக்கப்பட்டிருக்கிறது. மல்காபூர் என்ற கிராமத்தில் மாலிக்கபூர் மன்னனின் படைகள் இங்கு தங்கியிருந்ததாகவும், ஆரம்பத்தில் மாலிக்கபூர் என்ற பெயர் மருவி மல்காபூர் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
அழிக்கப்பட்ட கோயில் கல்குவியலாகவும், இடிபாடுகளாகவும், பாழடைந்த கல் மண்டபங்களாகவும் இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் 2004-ம் ஆண்டு புதியதாக சிவன் கோயிலை கட்ட முடிவு செய்தனர். இடிபாடுகளை அகற்றும் போது பழங்கால கோயிலில் இருந்த காசி விஸ்வநாதர் சிலை, அம்பாள் சிலை, சண்டிகேசுவரர் சிலை, பைரவர் சிலை, சந்திரபகவான் சிலை ஆகியவை கிடைத்தது. இவற்றை சுத்தப்படுத்தியும், புனரமைத்தும் கல் மண்டபத்தில் வைத்து வழிபட்டனர்.
2014ம் ஆண்டு மலையனூர் செக்கடி கிராம மக்கள் அங்கிருந்த 12 கால் மண்டபத்தை புனரமைப்பு செய்யும் பணியை தொடங்கினர். அப்போது மண்டபத்தைச் சுற்றி திகழ்த்தப்பட்ட ஆகழாய்வுகளில் கோயில் மதில் கட்டுமானங்கள், பதினாறு கால் மண்டபம் கட்டுமானம், அர்த்த மண்டபம், கருவறையின் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. மேலும் காலபைரவர், சண்டிகேஸ்வரர், சந்திரன், தீர்த்தக்கிணறு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. சிதிலமடைந்த பழைய கோயில் அமைந்திருந்த இடத்திலேயே புதிதாக சிவன் கற்கோயில் அமைக்க ஆதினம் தம்பிரான் சாமிகளால் 2014ம் ஆண்டு ஜுன் மாதம் 26-ம் பூமி தேதி பூஜை போடப்பட்டது.
சிதிலமடைந்த சிவன் கோயிலை மீட்டு சிற்பமாய் மீண்டும் அமைக்கும் முயற்சியில் கிராம மக்கள் முதல் நிதியாக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அதன்பிறகு பல லட்சம் ரூபாய் செலவிலும் சுவாமியின் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவை பழமை மாறாமல் கருங்கல்லால் திருப்பணிகளை நடத்தி முடித்து கடந்த 2021ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
இந்நிலையில்தான் இந்த கோயிலின் முன்புறம் சந்திரன், சூரியன், சனீஸ்வரன், குருபகவான் உள்ளிட்ட நவகிரக சன்னதிகளும், விநாயகர், ஆஞ்சநேயர் சன்னதிகளும் கட்டி முடிக்கப்பட்டன. முத்தாய்ப்பாக இந்த நவகிரக சன்னதிக்கு மேல் 15 உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கலைநயமிக்க மகா சிவலிங்கம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வருகிற 29-ஆம் தேதி இந்த நவகிரக சன்னதிக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மலையனூர் செக்கடி ஊர் பொதுமக்களும்,அப்பர் உழவாரப்பணி திருவண்ணாமலை சிவனடியார் திருக்கூட்டத்தினரும் செய்துள்ளனர்.
முதல் பூஜை காளைக்கு
காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ நாட்களில் முதலாவதாக காளைக்கு பூஜை செய்யப்படுகிறது. அதன்பிறகே நந்திக்கு செய்யப்படுகிறது.
யார் இந்த மாலிக்கபூர்?
மாலிக்கபூர், டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமை படைத்தலைவராக இருந்தவர். மாலிக்கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்து உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக்கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோயில் செல்வங்களை கொள்ளையடித்தார் என்பது வரலாறாகும். அந்த சமயத்தில்தான் மலையனூர் செக்கடி கோயிலும், கோட்டையும் இடித்து தள்ளப்பட்டிருக்கிறது.