புறா போன்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திருவண்ணாமலையில் ராட்சத ஏணி இன்றி கோபுரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோயில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். பஞ்சரதங்கள், சுவாமி வீதியுலா வர உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் வேலையும், வர்ணம் தீட்டும் பணியும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்கள், ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம் என 4 பெரிய கோபுரங்கள் மற்றும் உட்புற கோபுரங்கள் என 9 கோபுரங்கள் கொண்ட கோயிலாக விளங்கி வருகிறது.
ராஜ கோபுரம் 217 அடி உயரமும், திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமும், பே கோபுரம் 160 அடி உயரமும், அம்மணியம்மன் கோபுரம் 171 அடி உயரம் கொண்டதாகும்.
இந்த கோபுரங்களில் தூசி படர்ந்திருப்பதை அகற்ற முதன்முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னதாக சென்னை தீயணைப்பு துறையிடமிருந்த ஸ்கை லிப்ட் எனப்படும் ராட்சத ஏணி வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டும் இதே முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் ராட்சத ஏணி வரவழைக்கப்படாமல் திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் உள்ள வாகனங்களை கொண்டு கோபுரங்களை சுத்தப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களில் தீயணைப்பு வீரர்கள், குறிப்பிட்ட தூரம் வரை பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இந்த பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இவர்கள் கோபுரங்களில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றியும், புறா எச்சங்களையும் தூய்மைப்படுத்தினர்.
கோபுரங்களில் வசிக்கும் புறா போன்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே ராட்சத ஏணி மூலம் கோபுரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.