கொப்பரை எடுத்துச் செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது வழி பயன்படுத்தப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நாளை மறுநாள் 13-ஆம் தேதி நடைபெற உள்ள பரணி மற்றும் மகா தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணாமலையில் மகாதீபத்தன்று அண்ணாமலையார் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் காண 2500 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இம்மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 2 ஆம் தேதி பெஞ்சால் புயல் காரணமாக பெய்த கனமழையினால் அண்ணாமலையார் தீபம் ஏற்றும் மலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் மலையடிவாரத்தில் ஒரே வீட்டில் இருந்த 7 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் பல தெருக்களில் வெள்ளத்தினால் மணலும் கற்களும் அடைத்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைக் காண பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையின் புவியியல் வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
குழுவின் அறிக்கையில் மலையில் பெருமழையின் காரணமாக பல இடங்களில் மண்அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுகளும் பாறைகள் இடம் பெயர்ந்தும் மலை மீது ஏறும் வழிகளில் அதிக அளவில் மண்மூடியும் உள்ளது என்றும் பல இடங்களில் பெரிய பாறைகள் பெயர்ந்து உருண்டு விழும் நிலையும் உள்ளது என்றும், மழையின் காரணமாக ஊரிய தண்ணீர் தொடர்ந்து வழிந்து கொண்டும் மலையின் உச்சிப்பகுதியில் மண்படிவுகள் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதாகவும் கொப்பரை எடுத்துச் செல்லப்படும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் பிடிமானம் இன்றி தனித்தனியே மண் படிமங்கள் மீது உள்ளது என்பதால் மலையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மலை ஏறுவதனால் உயிருக்கு அபாயம் உள்ளது. பக்தர்கள் பக்தர்கள் மட்டுமன்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு 2500 பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து தீபம் ஏற்றும் 11 நாட்களும் மலையேற அனுமதி இல்லை
கொப்பரை எடுத்துச் செல்ல மலை மீது இரண்டு பாதைகள் உள்ளது. இதில் ஒரு பாதை உறுதியாக இருப்பதால் அந்தப் பாதையில் கொப்பரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
எந்த வழியிலிருந்தும் மலை ஏற வேண்டாம் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. மலையேறுவதை தடுக்க காவல்துறையினர், வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். எனவே எவரும் மலை ஏற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மரபு மாறாமல் பருவதராஜ குலத்தினர் தீபம் ஏற்றுவார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதி செய்து தரப்படும். கொப்பரை, திரியெடுத்து செல்வதற்கு வழக்கமான எண்ணிக்கையின் அடிப்படையில் ஆட்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 நாட்களும் தொடர்ந்து தீபம் எரிய விடப்படும்.
இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.