பரமனந்தல்-அமிர்தி இடையே ரூ.205 கோடியில் புதிய பாதை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அமைச்சர் எ.வ.வேலுவும், இன்று (26.12.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஜமுனாமரத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மருத்துவ கட்டிடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
ஆன்மீக பெருமக்கள் தங்களுடைய வேண்டுதலுக்காக 108 தேங்காய் உடைகிறேன் என அண்ணாமலையார் திருக்கோயிலில் வேண்டிக் கொள்வார்கள். ஏனென்றால் நமது ஊர் ஆன்மீக மண். 108 தேங்காய் உடைத்து நன்மை பயின்றதோ என தெரியாது. ஆனால் கலைஞர் தந்த 108 ஆம்புலன்ஸ் நமக்கு நேரடியாக பலன் தந்து கொண்டிருக்கிறது.
ஜமுனாமரத்தூருக்கு திமுக ஆட்சியில்தான் மின்சாரம், குடிநீர், சாலை என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வந்தால் அவரவர்கள் ஒரு சின்னத்தை தூக்கி கொண்டு ஆட்டமாக ஆடுகிறார்கள்.
77 கிலோ மீட்டர் அமர்தி- பரமனந்தல் இடையே மலையில் பாதை அமைக்கப்பட உள்ளது. 371 சிறுபாலங்கள், 25 சிறு மட்டும் பெரிய பாலங்கள், 26 கொண்டை ஊசி வளைவுகளை மேம்படுத்துதல், 45 இடங்களில் தடுப்பு சுவர், 24 இடங்களில் அமைப்பு சுவர், 22 இடங்களில் வடிகால் போன்றவற்றை அமைக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் 205 கோடி பணத்தை ஒதுக்கி இருக்கிறார். வனத்துறை இடத்தை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
சுறுசுறுப்பான அதிகாரிகள் இருந்தால் தான் அமைச்சர்கள் செயல்பட முடியும். அமைச்சர்கள் பாசிட்டிவ்வாக பண்ணுபவர்கள். ஆனால் உடன் இருக்கிற இயக்குனரோ, செயலாளரோ, திட்ட அலுவலர்களோ பாசிட்டிவ்வாக எண்ணினால்தான் திட்டங்கள் மக்களை சென்றடையும். நெகட்டிவ்வாக திங் செய்து விட்டால் என்றால் எதுவுமே நடக்காது.
இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 100சதவீதம் வந்திருக்கிறார்கள். பெரிய, பெரிய மந்திரி எல்லாம் வருகின்ற போது நாலு பேர் ஆப்சென்ட் ஆகி விடுவார்கள். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வந்திருக்கிறார் என்றதும் அனைத்து எம்எல்ஏக்களும் வந்து விட்டார்கள். என்ன காரணம் உங்கள் துறை மெஸ்மரிசம் துறை என்பதுதான்.
தானிப்பாடி மருத்துவமனை மலையில் இல்லை என்றாலும் மலைப்பகுதியை ஒட்டி இருக்கிற ஊராக உள்ளது. கலைஞர் காலத்தில் அது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அந்த மருத்துவமனையில் சில, சில குறைபாடுகள் இருக்கிறது. அமைச்சர் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னுரிமை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.