Homeசெய்திகள்கிரிவலப்பாதையில் குப்பைகள் கொட்டி மூடப்படும் குளம்

கிரிவலப்பாதையில் குப்பைகள் கொட்டி மூடப்படும் குளம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய குளம் ஒன்று தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி இருப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு,

திருவண்ணாமலையை சுற்றி 360 குளங்கள் இருந்ததாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணாமலையை சுற்றி பல தவக்குடிகள் இருந்ததாகவும், அதில் தவம் செய்பவர்களுக்காக பல்லவர் மரபைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கருடைய மகன் வேணாவுடையான் என்பவர் பல தோப்புகளையும், மண்டபங்களையும் உருவாக்கினார் எனவும், மலைவலம் வரும் பகுதிகளில் சில மண்டங்களும், தாமரை குளம், அய்யங்குளம் உள்ளிட்ட சில குளங்களும் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவரால் கட்டப்பட்டிருக்கலாம் என கல்வெட்டிலிருந்தும், சில பதிவுகளில் இருந்தும் அறியப்படுகிறது.

அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குளங்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய் 138 குளங்களாக சுருங்கி விட்டது. அதிலும் இப்போது 32 குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது என யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த குளங்கள் மற்றும் மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையில் குழ ஒன்றை அமைத்துள்ளது.

கிரிவலப்பாதையில் குப்பைகள் கொட்டி மூடப்படும் குளம்

இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஐந்து ரிஷி எனப்படும் குளம் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. குளத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குளத்தின் முன்புறமும், பின்புறமும் அரசு சார்பில் கட்டிங்கள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது இந்த குளத்தில் கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகளை சேகரித்து டிராக்டரில் எடுத்து வந்து கொட்டும் பணியை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது,

பழங்காலத்தில் ஐந்து ரிஷிகள் உருவாக்கி பயன்படுத்தியதால் இந்த குளத்திற்கு ஐந்து ரிஷி என பெயர் வந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஐந்து ரிஷியின் சிலை குளத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை இப்போது காணவில்லை. இந்த குளத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து சென்றிருக்கின்றனர்.

கிரிவலப்பாதையில் குப்பைகள் கொட்டி மூடப்படும் குளம்

குளத்தின் முன்புறம் கழிவறை கட்டப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்த குளத்தில் கலக்கும் வகையில் பைப் லைன் அமைக்கப்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து அந்த பைப் லைன் ஓடையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இப்போது இந்த குளத்தில் குப்பைகளை டிராக்டரில் எடுத்து வந்து கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் கிரிவலப்பாதையில் பழங்கால குளம் குப்பைகள் கொட்டி மூடப்படுவது பக்தர்களையும், பொதுமக்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!