நீதிமன்றத்திற்கு உயிர்கள் முக்கியம், வீடுகளுக்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது என மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி கூறினார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான இடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது மண் சரிவு நிகழ்ந்த விவரத்தை அவரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி எம்.கோவிந்தராஜன் பாறைகள் சரிந்திருப்பதை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நீதிமன்றத்திற்கு உயிர்கள் மிக முக்கியம். வீடுகளை கட்டும்போது பந்தம் ஏற்பட்டு விடும். அதை விட்டு விட்டு செல்வதற்கு மனது வராது. ஆனால் அதற்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது. அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள், நிவாரணம் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த 3-வது ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி.,சுதாகர், வழக்கு தொடர்ந்துள்ள யானை ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
குபேரலிங்கத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக அறிந்து மரங்களை வெட்டக்கூடாது என கலெக்டருக்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் ரிஷி குளம் குப்பைகள் கொட்டி மூடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மலைகளில் உள்ள வீடுகளில் படிப்படியாக எடுப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திடீரென்று ஒருவர் வெளியில் செல்ல வேண்டும் என்றால் எப்படி செல்வார்? அது முறையல்ல. அவர்களுக்கு ஒரு மாற்று வழி தேவை. இடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லாமே இரண்டு மாதத்தில் முடிவடைந்து விடும்.
மலை மீது 6000 வீடுகள் உள்ளது. அபாயகரமான இடத்தில் 1535 வீடுகள் உள்ளன. அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு. அவர்கள் அதற்கு அனுசரித்து அரசு கொடுக்கக் கூடிய சலுகைகளை ஏற்றுக் கொள்வது தான் நல்லது. அங்கேதான் இருப்பேன் என்று சொன்னால் இருக்க முடியாது. அது சம்பந்தமாக இரண்டு மாதத்தில் தெளிவான முடிவு வரும்.
மலை மீது இனி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.