திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் பணத்தை நூதன முறையில் திருடியவனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இத் தலம் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கோயிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மலையை சிவபெருமானாக கருதி ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும்¸ தீபத்திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர்.
அண்ணாமலையாரை வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும்¸ வியாபாரம் விருத்தியாகும்¸ உத்தியோக உயர்வு கிடைக்கும்¸ நோய்கள் நீங்கும்¸ துன்பங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுகிறவர்களும்¸ வேண்டுதல் நிறைவேறியவர்களும் உண்டியல் காணிக்கை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதைகளில் மொத்தம் 54 உண்டியல்கள் உள்ளன. அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்டியல்கள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் உள்ளன. இதே போல் உண்டியல்கள் எண்ணப்படும் பணியும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சிசிடிவி காட்சி |
இந்நிலையில் அண்ணாமலையார் கருவறையில் இருந்து வெளியே வரும் வழியில் உள்ள பிரதான உண்டியிலிருந்து நெற்றில் பட்டை அணிந்து கொண்டு பக்தர் வேஷத்தில் இருந்த ஒரு நபர் பணத்தை திருடுவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த அவனது பெயர் சுந்தரபாண்டியன் என்பதும், கிரிவலப்பாதையில் நித்யானந்தா ஆசிரமம் அருகில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
உண்டியலில் குச்சி மூலம் பை ஒன்றை உள்ளே நுழைத்து வைத்து விடுவதும், பிறகு பை நிரம்பியதும், மீண்டும் குச்சி மூலம் பையை எடுத்துச் சென்று விடுவதும் சுந்தரபாண்டியனின் வழக்கமாக இருந்து வந்ததும், இப்படி ஆயிரக்கணக்கான ரூபாய்களை அவன் திருடியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து கோயில் பாதுகாப்பு அதிகாரி ஏழுமலை, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.
சுந்தரபாண்டியன் |
நல்ல வாட்ட சாட்டமாக இருக்கும் சுந்தரபாண்டியன் கிரிவலப்பாதையில் வந்து சன்னியாசி வேஷத்தில் தங்கியது எதற்காக? என்றும், அவன் மீது ஏற்கனவே ஏதாவது வழக்குகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.