திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைச்சலில் கிடைத்த லாபம் மற்றும் செலவு கணக்கு விவரம் அண்ணாமலையார் முன்னிலையில் பொதுமக்களுக்கு படித்து காட்டப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டம் தனக்கோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமாக 147 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு குத்தகைதாரர்கள் மூலம் நெற்பயிர்களே பிரதானமாக விளைவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலத்தில் விளையும் நெற்பயிரிலிருந்து வரும் அரிசி அன்னதான திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைக்கோல் கோயிலில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இப்படி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவு அளித்து வரும் தனக்கோட்டிபுரத்தில் உள்ள தனது நிலத்திற்கு அண்ணாமலையார் செல்லும் நிகழ்வு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ரதசப்தமியை யொட்டி கலசப்பாக்கம் ஆற்று திருவிழாவிற்கு சென்ற அண்ணாமலையார் தனக்கோட்டிபுரம் நிலத்திற்கு சென்றார். இதனால் அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் மக்கள் திரண்டு வந்து அண்ணாமலையாருக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அண்ணாமலையாருக்கு, அவருக்கு சொந்தமான நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை வைத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது கூடியிருந்த கிராம மக்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தனக்கோட்டிபுரம் நிலத்தில் விளைச்சலில் கிடைத்த லாபம் மற்றும் செலவு கணக்கு விவரம் அண்ணாமலையார் முன்னிலையில் பொதுமக்களுக்கு படித்து காட்டப்பட்டது.
வரவு-செலவு கணக்கு விவரம்
பொன்னி சொன்ன ரகம் பச்சரிசி, பொன்னி சன்ன ரகம் முழு புழுங்கல் அரிசி, மகேந்திர புழுங்கல் அரிசி, மகேந்திர புழுங்கல் திட நொய், திட நொய், சிறு நொய், கருப்பு நொய், தவிடு நொய் இவையெல்லாம் அண்ணாமலையார் நிலத்தில் விளைந்திருக்கின்றன.
இதன் மூலம் 57 லட்சத்து 58 ஆயிரத்து 700 ரூபாய் வருமானம் வந்துள்ளது. இதில் 31 லட்சத்து 31 ஆயிரத்து 17 செலவாகி இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
விதை நெல் கொள்முதலுக்காக 1 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாயும், நாற்று விடுதல், வரப்பு கழித்தல், பரம்பு ஓட்டுதல், நாற்றுப் பரப்புதல், நாற்று நடவுக்கு 6 லட்சத்து 63 ஆயிரத்து 385 ரூபாயும், களை எடுத்தலுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது.
உரம், பூச்சிக்கொல்லி
உரம், பூச்சிக்கொல்லி செலவுக்கு 5 லட்சத்து 35 ஆயிரத்து 715 ரூபாயும், அறுவடை செலவுக்கு 2 லட்சத்து 43 ஆயிரத்து 320 ரூபாயும், நெல் அரவை மற்றும் வண்டி செலவுக்கு 7 லட்சத்து 56 ஆயிரத்து 820 ரூபாயும், பை கொள்முதலுக்கு 6 ஆயிரத்து 800 ரூபாயும், வைக்கோல் கட்டி ஏற்றி வந்ததற்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 870 ரூபாயும், நிலத்தை பராமரித்ததற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயும், சாப்பாடு செலவிற்கு 25 ஆயிரத்து 775 ரூபாயும் செலவாகி இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த செலவுத் தொகைகள் போக 26 லட்சத்து 27 ஆயிரத்து 683 ரூபாய் நிகர லாபம் கிடைத்திருப்பதாக படித்துக் காட்டப்பட்டது.
-படங்கள்- மணிமாறன்
அண்ணாமலையாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு வீடியோ…