திருவண்ணாமலையில் 3 மாடி, 17 அறை, லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலையில் பாரதிய ஜனதா கட்சிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு சுமார் 6 ஆயிரம் சதுர அடி உள்ள இடம் சொந்தமாக வாங்கப்பட்டது. இந்த இடத்தில் பாஜக அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கீழ்தளம் மற்றும் 3 அடுக்குடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 17 அறைகள் உள்ளன. லிப்ட் வசதியும் உள்ளது.
வருகிற 26-ஆம் தேதி சிவராத்திரி அன்று இந்த அலுவலகத்தை கோயம்புத்தூர் காணொலி காட்சி வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். இதே போல் அவர் கோயம்புத்தூரிலும் மாவட்ட தலைமை அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலையில் புதிய அலுவலக திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கான பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செட்டித் தெரு உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது,
தமிழகத்திலேயே பாஜக அலுவலகத்துக்காக முதன் முதலாக இடம் வாங்கப்பட்டது திருவண்ணாமலையில் தான். இந்த அலுவலகத்தை திறக்க அமித்ஷா திருவண்ணாமலைக்கு வர இருந்தார். ஆனால் 26-ஆம் தேதி கோயம்புத்தூரில் ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அங்கிருந்து காணொலி வாயிலாக அலுவலகத்தை திறந்து வைக்க இருக்கிறார். அன்று நல்ல நாள் என்பதால் திறக்க இருக்கிறார்.
திருவண்ணாமலையை போன்று தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் மூன்று அடுக்குடன் கூடிய பாஜக காரியாலயம் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் டி.அறவாழி முன்னாள் மாவட்ட தலைவர்கள் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் எஸ்.நேரு ஏ.ஜி.காந்தி இரா.ஜீவானந்தம் முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.சதீஷ்குமார், வழக்கறிஞர்கள் எம்.முருகன், டி.எஸ்.சங்கர் மற்றும் ஏ.கே.ஆர்.கதிரவன், ப.கிருஷ்ணமூர்த்தி, கவிதா பிரதீஷ், மூவேந்தன், செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
படங்கள்-பார்த்திபன்&மணிமாறன்.