திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த கொடி கம்பங்கள் 4299 இருப்பதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றுவது குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசியதாவது,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநிலம் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சாதி, மத ரீதியிலான அமைப்பினரின் அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணக்கெடுப்பின்படி அரசியல் கட்சிகள், சாதி, மதம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்ந்த 4,299 கொடிகம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் 1767 கொடிகம்பங்கள் அடிப்படை கட்டமைப்புகளுடனும், 2532 கொடிகம்பங்கள் அடிப்படை கட்டுமானமின்றி நிறுவப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சாதி, மத ரீதியிலான அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தங்களது கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த கொடிக்கம்பங்களை தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.