திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தேவகவுடா¸ நடிகர் புனித் ராஜ்குமாரின் உறவினர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெங்களுர் பசவனகுடியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுனிதா திமே கவுடா (வயது 50). கணவர் பெயர் அஷோக் ஷங். அண்ணாமலையார் மற்றும் ரமணமகரிஷியின் தீவிர பக்தரான சுனிதா திமே கவுடா திருவண்ணாமலைக்கு அடிக்கடி வந்து அண்ணாமலையார் கோயிலுக்கும்¸ ரமணாசிரமத்திற்கும் சென்று தரிசனம் செய்து வருவார். மேலும் அன்னதானம் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
சுனிதா திமே கவுடா |
இந்நிலையில் அவர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது¸
நான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும்¸ ஸ்ரீஇரமண மகரிஷி ஆஸ்ரமத்திற்கு கடந்த இருபது ஆண்டுகளாக வந்து தரிசனம் செய்து வருகிறேன். செங்கம் ரோடு கிரிவலபாதையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் கிரிவலபாதையில் அன்னதானம் வழங்கும்போது அங்கு இரமண மகரிஷி ஆஸ்ரம நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் கண்ணன்¸ தன்னார்வலர்களாக இருந்து வரும் ஜெயந்தி பிரேம்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் அங்கு வந்து அறிமுகம் செய்து கொண்டு இனிமே நீங்கள் எங்கள் ஆஸ்ரமத்திற்க்குள் பக்தர்களுக்கு அன்னதானம் தயாரித்து வழங்குங்கள்¸ உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாங்கள் செய்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.
அவர்கள் கேட்டதற்கிணங்க அன்னதானம் செய்தேன். 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் பவுர்ணமிக்கு அன்னதானம் வழங்க பெங்களுரில் இருந்து பிராமண சமையல் மாஸ்டர்கள் அழைத்து வந்தபோது அவர்கள் பூனூல் அணியவில்லை என்று 25 நபர்களை சமையல் செய்யக்கூடாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். சிவதாஸ் கிருஷ்ணன் ஸ்வீட் வைத்திருந்த பாத்திரங்களை காலால் எட்டி உதைத்து ஸ்வீட்டுகளை நாசம் செய்தார். அவரால் நான் அழைத்து வந்த சமையல் கலைஞர்களுக்கு பெரும் மனவேதனையும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இதற்காக மன்னிப்பு கேட்க சொன்னதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். இனி திருவண்ணாமலையில் உன்னை நான் எங்கு பார்த்தாலும் ரவுடிகளை வைத்து கொலை பண்ணிடுவேன் என்று மிரட்டினார். பிறகு ஆஸ்ரமத்திற்கு வெளியே அன்னதானம் செய்த போதும் செக்கியூரிட்டியை வைத்து மிரட்டினார்.
இது சம்மந்தமாக 25-6-2016 தேதியன்று திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது ஆஸ்ரம நிர்வாகி சிவதாஷ் கிருஷ்ணன் அமெரிக்கா சென்றுவிட்டதால். கண்ணனை மட்டும் அழைத்து விசாரித்தனர். அவர் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததால் அவர்மீது நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனது உதவியாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னியிடம் மேற்படி ஆஸ்ரமத்தில் அன்னதானத்தின் போது வழங்கப்பட்ட சுமார் ரூ.30 லட்சத்தில் சிவதாஸ் கிருஷ்ணனுடன் சேர்ந்து ஸ்ரீரீகாந்த் குல்கர்னி¸ ஜெயந்தி பிரேம்குமார் மற்றும் பிரேம்குமார் நால்வரும் சேர்ந்து பெருமளவு பணத்தை கையாடல் செய்தது தெரிந்தது. நான் ஸ்ரீகாந்த் குல்கர்னி மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். மாவட்ட குற்றபிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நான் கடந்த 5ந் தேதி காலை காலை சுமார் 9 மணிக்கு இரமண மகரிஷியை வணங்க சென்றபோது தாயார் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது சுகுமார் என்பவர் என்னை பார்த்து அறுவறுக்கத்தக்க காரியத்தை செய்தார். செக்கியூரிட்டியை வைத்து விரட்டினர்.
ரமணாசிரமத்தில் தொடர்ந்து என்னை இழிவுப்படுத்தி அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து ஆபாச சைகைகள் செய்து அருவருக்கதக்க வகையால் கொடுமைகள் செய்து வருவதால் என்னால் ஆஸ்ரமத்தில் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியவில்லை ஆஸ்ரமம் சென்றால் என் பெண்மைக்கும் பெரும் பங்கம் ஏற்படும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமத்திற்கு வரும் சிவபக்தைகளிடமும்¸ ஆசிரமத்தில் பணிபுரியும் பெண்களிடமும் சிவதாஸ் கிருஷ்ணன்¸ சுகுமார் ஆகியோர் பாலியல் கொடுமைகள் செய்கின்றனர். ஒரு நேர்மையான பெண் காவல் அதிகாரியை நியமித்து விசாரனைகள் செய்தால் பல பாலியல் கொடுமைகள் பற்றிய விவரம் தெரிய வரும். மேலும் லைப்ரரியன் ஜெயராமன் மற்றும் ஜெயந்தி பிரேம்குமார்¸ பிரேம்குமார்¸ சிவதாஸ் கிருஷ்ணன்¸ ஆகியோர் கஞ்சா பயன்படுத்துவதோடு ஆசிரமத்திற்கு வரும் பக்கதர்களுக்கும் கஞ்சாவை விற்கின்றனர். மொத்தத்தில் இரமணா ஆஸ்ரமம் போதைப் பொருள்கள் கடத்தல் இடமாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது.
எனவே உரிய நடவடிக்கை எடுத்து என்னை உயிராபத்திலிருந்து காப்பாற்றுமாறும்¸ ரமணர் பக்தையான என்னை ஆஸ்ரமத்தில் தரிசனம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறும்¸ பாலியல் வன்முறை மற்றும போதை பொருள் கடத்தல் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து ரமணா ஆஸ்ரமத்தின் நற்பெயரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து இன்று செய்தியாளர்களை¸ சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞருடன் சந்தித்த சுனிதா திமே கவுடா தனது புகாரில் மணி¸ சிவதாஸ்கிருஷ்ணன்¸ சத்யமூர்த்தி¸ பிரேம்குமார்¸ ஜெயந்தி¸ சுகுமாறன்¸ ஜெயராமன்¸ ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவித்தார். அப்போது திருவண்ணாமலை வழக்கறிஞர் அபிராமன் உடன் இருந்தார்.
இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு சாட்சி மற்றும் ஆவணங்களுடன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி¸ சுனிதா திமே கவுடாக்கு இன்ஸ்பெக்டர் சம்மன் அனுப்பியுள்ளார்.
ரமணாசிரமம் மீது புகார் தெரிவித்துள்ள சுனிதா திமே கவுடா¸ ஆதித்யாராம் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உறவினர் என சொல்லப்படுகிறது. கடந்த வருடம் தீபத்திருவிழா அன்று இவர் அண்ணாமலையார் கோயிலை அலங்கரிக்க ரூ.15 லட்சம் மதிப்புள்ள 8 டன் பூக்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ் பெற்ற ரமணாசிரமம் மீது பெண் பக்தை புகார் தெரிவித்திருப்பது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.