நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை 1 வாரத்திற்குள் தடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என பா.ஜ.க எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ரூ.100 வரை வசூல் செய்யப்படுவதை கண்டித்து திருவண்ணாமலை வட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.
விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸
திமுக ஆட்சி நடக்கும் போதெல்லாம் மக்களுக்கு துயரம் ஏற்படும். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இடம் புகார் தெரிவிக்கப்பட்டது அதற்கு அவர் 30 பேரை வேலையிலிருந்து எடுத்துவிட்டோம் இனிமேல் முறைகேடு நடைபெறாது என்றார். ஆனால் அவர் சொன்னது பிறகுதான் விவசாயிகளிடம் 60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு சாதகமான அரசு இல்லை நிரூபணமாகியுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை திமுகவினர் கையகப்படுத்தி உள்ளனர் இதன்மூலம் அவர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். 1 வார காலத்திற்குள் இந்த முறைகேட்டை நீக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.சதீஷ்குமார்¸ ரமேஷ்¸ சேகர்¸ ஒபிசி அணி மாவட்ட தலைவர் எம்.டி.சுந்தர்ராஜ்¸ மாவட்ட பார்வையாளர் ஆர்.ராஜ்குமார் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி¸ வி.பழனிவேல்¸ ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ரமேஷ்¸ மாவட்ட பிரச்சார அணி தலைவர் அருணாச்சலம் மற்றும் மாவட்ட¸ ஒன்றிய¸ நகர நிர்வாகிகள்¸ அணி நிர்வாகிகள்¸ மகளிர் சுய உதவிக்குழுவினர் விவசாய பிரதிநிதிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கொள்முதல் செய்¸ கொள்முதல் செய். விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய். வாழவிடு வாழவிடு¸ விவசாயிகளை வாழவிடு. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய் என பாஜகவினர் கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 8 நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக திமுகவினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை நியாயமான முறையில் விற்க முடியவில்லை. இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி ரூ 500 லாபத்துடன் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கும் பணம் தருவதில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன என்றார்.
பிறகு அவரும்¸ நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.